Published : 03 Jul 2018 10:30 AM
Last Updated : 03 Jul 2018 10:30 AM
கேரளாவில் வங்கி கணக்கு குளறுபடியால் 22 பேர் இரவில் கோடீஸ்வரர்களாகி காலையில் அந்த தொகையை இழந்த சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பிரபல ஆயுர்வேத மருத்துவ நிறுவனமான கோட்டக்கல் ஆயுர்வேத வைத்தியசாலை. கேரளா மட்டுமின்றி பல மாநிலங்களிலும் இந்நிறுவத்திற்கு கிளைகள் உள்ளன. மலப்புரம் மாவட்டம் கோட்டக்கலில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உள்ளூரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்காக அந்த ஊழியர்களுக்கு வங்கி கிளையில் சேமிப்பு கணக்குகள் உள்ளன.
இந்நிலையில் கோட்டக்கல் ஆயுர்வேத வைத்திய சாலையின் ஊழியர்கள் 22 பேருக்கு சில நாட்களுக்கு முன் மாலை நேரத்தில் அவர்களது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கில் பல லட்சம் ரூபாய் பணம் டெபாசிட் ஆனதாக மொபைல் போன்களில் குறுஞ்செய்திகள் வந்துள்ளன. 90 லட்சம் முதல் சிலருக்கு கோடிகள் வரை பணம் டெபாசிட் ஆகி இருந்தது.
இதை பார்த்து திக்குமுக்காடி போன சிலர் இது எப்படி சாத்தியம் என குளம்பிபோயினர். ஊழியர்கள் ஒருவரையொருவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினர். தங்கள் நிறுவத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலருக்கும் இதுபோன்று தகவல் வந்ததால் அவர்கள் குழப்பம் அதிகமானது. தங்கள் நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதா எனவும் சந்தேகம் கொண்டனர்.
அன்றைய இரவு முழுவதும் இந்த ஆனந்தம் கலந்த சந்தேகம் நீடித்தது. ஊழியர்கள் மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தினரும் பணம் வந்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாமலும், அதேசமயம் உண்மையை தெரிந்து கொள்ளும் ஆவலுடனும் இரவை கழித்தனர். 22 ஊழியர்களும் காலையில் வங்கி கிளை திறந்ததும் நேரடியாக சென்று விசாரித்துள்ளனர்.
ஆனால் இந்த விவரத்தை ஏற்கெனவே தெரிந்த வங்கி ஊழியர்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது நடந்து விட்டதாகவும், தவறுதலாக கணக்கு காட்டப்பட்டு இந்த குழப்பம் நடந்துள்ளதாகவும் கூறினர். அதுமட்டுமின்றி கணக்கு சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்படும் வரை 22 பேரின் வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இருந்து பணம் எடுக்கவோ, பணம் போடவோ முடியாது எனவும் கூறினர். இதனால் 22 பேரும் அதிர்ந்து போயினர்.
அன்றாட செலவுக்கு தேவைப்படும் எங்கள் பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரினர். ஆனாலும் வங்கிகிளை அதற்கு அனுமதிக்க முடியாது என கூறி விட்டது. இதனால் ஒரு நாள் இரவில் கோடீஸ்வரரான அந்த ஊழியர்கள், காலையில் சொந்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலைக்கு ஆளாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT