Published : 02 Feb 2025 07:52 PM
Last Updated : 02 Feb 2025 07:52 PM

“பழங்குடியினர் நலத்துறைக்கு ‘உயர் வகுப்பு’ அமைச்சரே தேவை” - சுரேஷ் கோபி கருத்தால் சர்ச்சை

சுரேஷ் கோபி | கோப்புப்படம்

புதுடெல்லி: “பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தை உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும்” என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அவர் தனது கருத்தை திரும்பப் பெற்றார்.

டெல்லியில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டதில் பேசிய நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி கூறுகையில், “பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தை உயர் வகுப்பினர் மேற்பார்வையிட்டால் மட்டுமே உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே பழங்குடியினர் நலத்துறைக்கு அமைச்சராக முடியும் என்பது நம் நாட்டின் சாபக்கேடு.

பழங்குடியின சமூகத்துக்கு வெளியே உள்ள ஒருவர், அவர்களின் நலன்களைக் கண்காணிக்க நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது கனவும் எதிர்பார்ப்பும். அவ்வாறு பொறுப்பேற்கும்போது குறிப்பிடத்தகுந்த மாற்றம் இருக்கும். அதேபோல், பழங்குடியினத் தலைவர்களுக்கு முன்னேறிய வகுப்பின் துறைகள் வழங்கப்பட வேண்டும். இந்த வகையான மாற்றங்கள் நமது ஜனநாயக அமைப்பில் நடக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும், திருச்சூர் எம்.பி.யான கோபி, பழங்குடியினர் நலத்துறைக்கு அமைச்சராகும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி அந்தத் துறையை தனக்கு ஒதுக்குமாறு பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், என்றாலும், துறைகளை ஒதுக்கீடு செய்வதில் இங்கே சில முன்னுதாரணங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார்.

சுரேஷ் கோபியின் இந்தப் பேச்சு கேரளா முழுவதும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பெனோய் விஸ்வம், கோபி சதுர்வர்ணத்தின் (சாதிய அமைப்பின்) எக்காளம் (piper) என்றும், அவரை உடனடியாக பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சுரேஷ் கோபியின் கருத்துகளுக்கு அவரை கடுமையாக கண்டித்துள்ள பிரபல பழங்குடியினத் தலைவரான சி.கே.ஜானு, "பழங்குடியினரை கீழ் சாதி என்று அழைத்திருப்பது அவரின் அறியாமையைக் காட்டுகிறது” என்று சாடியுள்ளார்.

தற்போது மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக ஒடிசாவைச் சேர்ந்த பாஜகவின் முக்கிய பழங்குடியின முகமான ஜுவல் ஓரம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்தை திரும்பப் பெற்ற சுரேஷ்: தனது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி கண்டனங்கள் குவியத் தொடங்கியதை அடுத்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தனது கருத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். தான் யாரையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசவில்லை என்றும், தனது கருத்து சரியாக புரிந்துகொள்ளப்படாததால், அந்தக் கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த மற்றொரு இணை அமைச்சரான ஜார்ஜ் குரியனையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பெனோய் விஸ்வம் சாடியுள்ளார். “மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியினைப் பெற மாநிலத்தை கல்வி, உள்கட்டமைப்பு, சமூக நலனில் பின்தங்கியதாக அறிவிக்க வேண்டும்” என்று குரியன் தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஸ்வம், "ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்திய அரசியலமைப்பு சந்தித்துவரும் சவால்களுக்கு கேரளத்தைச் சேர்ந்த இந்த இரண்டு அமைச்சர்களும் வாழும் உதாரணம். இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலரான குடியரசுத் தலைவர் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு அமைச்சர்களின் பேச்சு குறித்து பாஜக அதன் நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x