Published : 02 Feb 2025 05:06 AM
Last Updated : 02 Feb 2025 05:06 AM
ஹைதராபாத்: ஈம காரியங்கள் செய்ய பணம் இல்லாததால், தாய் இறந்த துக்கம் தாளாமல் 9 நாட்கள் வரை வீட்டை பூட்டிக்கொண்டு பட்டினியோடு 2 மகள்கள் தங்கி இருந்துள்ளனர்.
ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் ராஜு. இவருக்கும் லலிதா (45) என்பவருக்கும் கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரவளிகா (24), யஷ்வதா (22) என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டில் ராஜுவுக்கும் லலிதாவுக்கும் (45) கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனை தொடர்ந்து லலிதா தனது வயதான தாய் மற்றும் மகள்களுடன் செகந்திராபாத் புத்தா நகரில் வசித்து வந்தார்.
மூத்த மகள் ரவளிகா துணிக்கடையிலும், இளைய மகள் யஷ்வதா தனியார் நிறுவனத்திலும் பணியாற்றி வருகின்றனர். இரு மகள்களின் வருமானத்தில் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. இதனிடையே லலிதாவின் தாய் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்தார். தொடர்ந்து 3 மாதங்கள் வரை வீட்டு வாடகை கட்டாததால் வீட்டை காலி செய்ய அதன் உரிமையாளர் வற்புறுத்தி உள்ளார். கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி தூங்கி கொண்டிருந்த போது லலிதாவின் உயிர் பிரிந்தது.
காலை எழுந்ததும் தாய் இறந்து கிடந்ததை பார்த்த இரு மகள்களும் கதறி அழுதனர். கையில் ஈம காரியங்கள் செய்ய கூட காசில்லை. அடுத்த வேளை சாப்பிட கூட பணம் இல்லை. வீட்டையும் காலி செய்ய வேண்டும். என்ன செய்வது என தெரியாமல் அழுதபடியே இறந்த தாயுடன் பட்டினியாக கிடந்துள்ளனர். ஒரு வாரம் ஆன நிலையில், இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். ஆனாலும் இவர்கள் இறக்கவில்லை.
இந்நிலையில், நேற்று காலை வீட்டின் கதவை திறந்து வெளியே வந்து, பக்கத்து வீட்டாரிடம் நடந்த விஷயங்களை கூறி அழுதுள்ளனர். அவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி செகந்திராபாத் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, லலிதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்றுள்ள 2 மகள்களையும் சிகிச்சைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment