Published : 01 Feb 2025 06:57 AM
Last Updated : 01 Feb 2025 06:57 AM
குடியரசுத் தலைவர் மாளிகையில் முதல்முறையாக பெண் சிஆர்பிஎப் அதிகாரிக்கு திருமணம் நடைபெற உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு பெண் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு வழங்கும் புகைப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த பெண் அதிகாரி யார் என்ற கேள்வி நாடு முழுவதும் எதிரொலித்தது. இதுதொடர்பாக முன்னணி ஊடகங்கள் புலன் விசாரணை நடத்தி, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளித்தது சிஆர்பிஎப் படையை சேர்ந்த பெண் அதிகாரி பூனம் குப்தா என்று விளக்கம் அளித்தன. இவர் பிரதமருக்கான பாதுகாப்பு படையில் இல்லை. குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு படையில் இருக்கிறார் என்றும் ஊடகங்கள் சுட்டிக் காட்டின.
அப்போதுமுதல் சிஆர்பிஎப் துணை கமாண்டர் பூனம் குப்தா நாடு முழுவதும் பிரபலமாக உள்ளார். மத்திய பிரதேசத்தின் சிவபுரியை சேர்ந்த அவருக்கும் காஷ்மீரில் சிஆர்பிஎப் துணை கமாண்டராக பணியாற்றும் அவினாஷ் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
பூனம் குப்தாவின் திருமணம் குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முக்கு அண்மையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையின் அன்னை தெரசா வளாகத்தில் திருமணத்தை நடத்த அவர் ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இதன்படி வரும் 12-ம் தேதி பூனம் குப்தா, அவினாஷ் குமாரின் திருமணம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. முதல்முறையாக அரசு அதிகாரி ஒருவரின் திருமணம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கிறது. இதுகுறித்து பூனம் குப்தாவின் நெருங்கிய உறவினர் சோனு கூறியதாவது:
மத்திய பிரதேசத்தின் சிவபுரியில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியின் அலுவலக மேலாளராக ரகுவீர் குப்தா பணியாற்றுகிறார். இவரது மூத்த மகள் பூனம் குப்தா. கணிதத்தில் இளநிலை பட்டம் பெற்ற பூனம், ஆங்கில இலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். பின்னர் குவாலியரில் பி.எட் பட்டம் பெற்றார்.
கடந்த 2018-ம் ஆண்டில் யுபிஎஸ்சி சிஏபிஎப் தேர்வை எழுதிய பூனம் சிஆர்பிஎப் படையில் துணை கமாண்டராக பணியில் சேர்ந்தார். தற்போது அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். அவரது நன்னடத்தையால் கவரப்பட்ட முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் பூனமின் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இந்த திருமண விழா குடியரசுத் தலைவர் முர்மு தலைமையில் நடைபெற உள்ளது. இவ்வாறு சோனு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...