Published : 01 Feb 2025 06:42 AM
Last Updated : 01 Feb 2025 06:42 AM
புதுடெல்லி: மத்திய அரசின் திட்டங்களால் நாடு முழுவதிலும் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டு முன்னேறியுள்ளனர் என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட்கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அவரை குதிரைப்படை வீரர்கள், நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகார துறைஅமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் வரவேற்று மக்களவைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவர் பேசியதாவது: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 2 மாதங்களுக்கு முன்பு அரசியல் சாசனத்தின் 75-வது ஆண்டை கொண்டாடினோம். சில நாட்களுக்கு முன்பு இந்திய குடியரசு தனது 75-வது ஆண்டை நிறைவு செய்தது. இது நாட்டின் கவுரவத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த நேரத்தில், அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் மற்றும் தலைவர்களுக்கு இந்திய மக்கள் சார்பில் புகழாரம் சூட்டுகிறேன்.
நம் நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மவுனி அமாவாசையன்று அங்கு நிகழ்ந்ததுரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு வருத்தமும், வேதனையும் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் வீடு எனது அரசின் 3-வது ஆட்சியில், அனைவருக்கும் வீடு கட்டித்தர உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும் 3 கோடி குடும்பங்களுக்கு வீடுவழங்கும் வகையில் பிரதமரின் வீட்டு வசதி திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.5.36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்வாமித்வா திட்டத்தின்கீழ் 2.25 கோடி பேருக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களில் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ரூ.41,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 70 வயதை கடந்த மூத்த குடிமக்கள், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறுவார்கள். தொழில் தொடங்குவதை எளிதாக்க பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. முத்ராதிட்டத்தில் சிறு தொழில் முனைவோருக்கான நிதி உதவி ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு கல்வி வழங்குவதிலும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் எனது அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது. பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்தின்கீழ் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
பொருளாதார நிலைத்தன்மை: கரோனாவால் உலகமே பாதிக்கப்பட்ட நிலையிலும், இந்திய பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருந்து தனது வலிமையை நிரூபித்துவருகிறது. ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு, அனைத்து மாநிலங்களுக்கும் பயன் அளிக்கிறது. ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்கள் மூலம் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் ‘மேட் இன் இந்தியா’ என பெருமையுடன் குறிப்பிடுகின்றன.
அரசின் திட்டங்களால் பல தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக, ஏழை மக்கள்பயனடையும்போதுதான் வளர்ச்சி என்பது உண்மையான அர்த்தம் பெறுகிறது. இதற்காகவே அந்த்யோதயா திட்டத்தை அரசு உறுதியுடன் செயல்படுத்துகிறது. ஏழை மக்களுக்கு கவுரவமான வாழ்க்கை வழங்கப்படும்போது, அது அவர்களை மேம்பட செய்து, வறுமையில் இருந்து விடுபட உதவுகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 12 கோடி கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் 10 கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சவுபாக்யா திட்டத்தில் 80 கோடி பேருக்குரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஜல் ஜீவன் திட்டத்தில் ஏழைகளின் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி அவர்கள் கவுரவத்துடன் வாழ வழி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதுபோன்ற முயற்சிகள், திட்டங்களால் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டு முன்னேறியுள்ளனர். இவ்வாறு குடியரசுத் தலைவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...