Published : 31 Jan 2025 10:25 PM
Last Updated : 31 Jan 2025 10:25 PM
புதுடெல்லி: பிப்ரவரி 5-ம் தேதி டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏ-க்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளனர். இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்சியில் இருந்து விலகி உள்ள எம்எல்ஏ-க்கள் மாற்று கட்சியோடு தொடர்பில் இருந்து வருவதாகவும், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்ட காரணத்தாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல். அவர்கள் அனைவரும் ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான கேஜ்ரிவாலிடம் தங்களது முடிவை கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். அந்த கடிதத்தை சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளனர்.
பாலம் எம்எல்ஏ பாவனா கவுர், கஸ்தூர்பா நகர் எம்எல்ஏ மதன் லால், திரிலோக்புரி எம்எல்ஏ ரோஹித், ஜானக்புரி எம்எல்ஏ ராஜேஷ் ரிஷி, மெஹ்ரௌலி எம்எல்ஏ நரேஷ் யாதவ், ஆதர்ஷ் நகர் எம்எல்ஏ பவன் சர்மா மற்றும் பிஜ்வாசன் தொகுதி எம்எல்ஏ பி.எஸ்.ஸூன் ஆகியோர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். இதில் நரேஷ் யாதவ் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றிருந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட காரணத்தால் தேர்தலில் இருந்து விலகினார்.
“உங்கள் மீதும் ஆம் ஆத்மி கட்சியின் மீதும் எனக்கு நம்பிக்கை போய்விட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். தயவுசெய்து இதை ஏற்றுக் கொள்ளுங்கள்” என கட்சியில் இருந்து விலகிய எம்எல்ஏ-க்கள் கேஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மி ஊழல் கட்சி என அவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் முடிவோடு தேர்தலை எதிர்கொள்கிறது ஆம் ஆத்மி. இந்த சூழலில் 7 எம்எல்ஏ-க்கள் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. அங்கு பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. டெல்லி தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...