Published : 31 Jan 2025 07:58 PM
Last Updated : 31 Jan 2025 07:58 PM

ஈரானில் 3, ரஷ்யாவில் 16 இந்தியர்கள் மாயம் - மீட்பு நடவடிக்கைகளில் இந்தியா தீவிரம்

வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

புதுடெல்லி: ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள், ரஷ்யாவில் காணாமால் போன 16 இந்தியர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமரின் அமெரிக்கப் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், "பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் உரையாடினர். இந்தியா -அமெரிக்கா இடையேயான விரிவான சர்வதேச கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்காக பிரதமரின் அமெரிக்க வருகையை முன்கூட்டியே மேற்கொள்வதற்காக இரு தரப்பினரும் பணியாற்றி வருகின்றனர். இந்த பயணத்துக்கான தேதிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.

26/11 மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணா, அமெரிக்காவில் இருந்து எப்போது இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்ற கேள்விக்கு பதில் அளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், "2025 ஜனவரி 21 அன்று குற்றம் சாட்டப்பட்டவரின் மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவர்களை இந்தியாவுக்கு விரைவில் நாடு கடத்துவதற்கான நடைமுறை சிக்கல்கள் குறித்து நாங்கள் இப்போது அமெரிக்க தரப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்." என குறிப்பிட்டார்.

மேலும் அவர், "வணிக நோக்கங்களுக்காக ஈரானுக்குச் சென்ற 3 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். டெல்லியில் உள்ள ஈரானிய தூதரகம் மற்றும் தெஹ்ரானில் உள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சகத்திடம் இந்த விஷயத்தை நாங்கள் எடுத்துரைத்துள்ளோம். வெளியுறவுத் துறை அமைச்சகமும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகமும் ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளன. காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவர்களின் உதவியைக் கோரியுள்ளன" என்றார்.

இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதர்கள் மகா கும்பமேளாவுக்குச் செல்ல இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், "ஆம், இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதர்கள் கும்பமேளாவைப் பார்வையிட நாளை செல்வார்கள். எண்ணிக்கை விவரங்களை நாங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களுடன் பகிர்ந்து கொள்வோம். நாளை வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்" என குறிப்பிட்டார்.

ரஷ்யாவில் காணாமல் போன இந்தியர்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், "18 பேரில் 16 பேர் காணாமல் போயுள்ளனர். நாங்கள் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். அந்த இரண்டு பேரில் ஒருவர் காயமடைந்தார். அவர் குணமடைந்து விரைவில் திரும்பி வருவார் என்று நம்புகிறோம்" என தெரிவித்தார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் எப்போது நாடு கடத்தப்படுவார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த ரந்திர் ஜெய்ஸ்வால், "கடந்த வாரம் நான் கூறியது போல், சட்டவிரோத இடப்பெயர்வை இந்தியா உறுதியாக எதிர்க்கிறது. இது தொடர்பாக இரு தரப்பும் (இந்தியா - அமெரிக்கா ) சட்டவிரோத இடப்பெயர்வைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டப்பூர்வ இடப்பெயர்வுக்கான கூடுதல் வழிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஒத்துழைப்பைத் தொடர நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்பு, அவர்களின் தேசியம் உட்பட தேவையான சரிபார்ப்பை இந்திய அரசு செய்ய வேண்டும். இந்த கட்டத்தில் எண்கள் பற்றிய எந்தப் பேச்சும் முன்கூட்டியே முடிவாகாது. ஆனால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இந்த துறையில் வலுவானது, பயனுள்ளது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இது வரும் காலங்களில் தெளிவாகத் தெரியும்" என கூறினார்.

வங்கதேசத்துடனான எல்லை பிரச்சினை குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரந்திர் ஜெய்ஸ்வால், "வங்கதேச எல்லை தொடர்பாக BSF மற்றும் BGB இடையேயான DG-நிலைப் பேச்சுவார்த்தைகள் பிப்ரவரி 17 முதல் 20, 2025 வரை புதுடெல்லியில் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, எல்லை தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் விவாதிக்கப்படும். பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மதிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x