Published : 31 Jan 2025 03:27 AM
Last Updated : 31 Jan 2025 03:27 AM

பாலாற்றை மாசுபடுத்தும் தோல் தொழிற்சாலை அதிபர்களை திஹார் சிறைக்கு அனுப்ப நேரிடும்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

விதிகளை மதிக்காமல் பாலாற்றை மாசுபடுத்தும் தோல் தொழிற்சாலை அதிபர்களை திஹார் சிறைக்கு அனுப்ப நேரிடும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், ஆற்று நீரில் வெள்ளை நிறத்தில் நுரை பொங்கி வருவதால், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பாலாற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரக்கோரியும் வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு அமர்வு ஏற்படுத்தி விசாரி்க்க உத்தரவிட்டது. அதன்படி பாலாற்றில் கழிவுகளை கலக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளிடமிருந்து உரிய இழப்பீடு வசூலித்து, அதை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும், கழிவுநீரை உரிய முறையில் சுத்திகரித்து வெளியேற்றவும் கடந்த 2009-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் தோல் தொழிற்சாலைகள், விதிகளை மதிக்காமல் கழிவுகளை பாலாற்றில் கலந்து வருவதால் அந்த தொழிற்சாலைகளை மூடவும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுகளால் ஏற்பட்ட மாசு காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட ஆலைகளிடமிருந்து வசூலித்துக் கொடுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நாங்களும் உறுதி செய்கிறோம்.

கண்காணிப்பு குழு: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மத்திய, மாநில அரசின் சுற்றுச்சூழலியல் நிபுணர்கள் அடங்கிய குழுவை 4 வாரங்களில் அமைத்து பாலாற்று பகுதிகளில் மாசு கலப்பதை தடுக்க கண்காணிக்க வேண்டும். உரிய பரிந்துரைகளை அவ்வப்போது தோல் தொழிற்சாலைகளுக்கும் வழங்க வேண்டும்.

பாலாற்றில் மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறி்த்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், விதிகளை மதிக்காமல் பாலாற்றை மாசுபடுத்தும் தோல் தொழிற்சாலை அதிபர்களை திஹார் சிறைக்கு அனுப்ப நேரிடும், என எச்சரித்து வழக்கு விசாரணையை 4 மாதங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x