Published : 30 Jan 2025 02:51 PM
Last Updated : 30 Jan 2025 02:51 PM
சண்டிகர்: சண்டிகரில் இன்று (வியாழக்கிழமை) நடந்த மேயர் தேர்தலில் மொத்தமுள்ள 36 வாக்குகளில் 19 வாக்குகள் பெற்று பாஜகவின் ஹர்ப்ரீத் கவுர் பாப்லா புதிய மேயராக தேர்வாகியுள்ளார்.
மேயர் தேர்தல் அதிகாரி கூறுகையில், “36 வாக்குகள் முழுமையாக பதிவாகியிருந்தன. செல்லாத வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை. பாஜக வேட்பாளர் பாப்லா 19 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் பிரேம் லதா 17 வாக்குகள் பெற்றார்.” என்றார். ஆம் ஆத்மி வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்திருந்தது. இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூன்று கவுன்சிலர்கள் மாற்றி வாக்களித்திருந்தனர் (cross-voted) இது தேர்தலின் முடிவினை மாற்றி பாஜகவுக்கு சாதகமாகி வெற்றிவாகை சூடவைத்துள்ளது.
சண்டிகர் மேயர் தேர்தலின் முடிவு ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தேர்தலுக்கு முன்பாக இந்தக் கூட்டணிக்கு 19 கவுன்சிலர்கள் இருந்தனர். அதேபோல் இந்தக் கூட்டணி அதன் பதவி வழி உறுப்பினரான (ex-officio member) எம்.பி., மணீஷ் திவாரியின் ஆதரவினையும் எதிர்பார்த்திருந்தது. இதனால் அதன் பலம் 20 ஆக இருந்தது. இதனிடையே, 16 கவுன்சிலர்களின் ஆதரவினை வைத்திருந்த பாஜக பெரும்பான்மையான 19 வாக்குகளைப்பெற கட்சித்தாவல்களை நம்பியிருந்தது.
தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கவுன்சிலர் குருபக்ஸ் ராவத் அணி மாறி பாஜகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து கட்சித் தாவல்களை தடுப்பதற்கு இண்டியா கூட்டணி அதன் கவுன்சிலர்களை பஞ்சாப்பின் ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்தது. இருந்தபோதிலும் மூன்று கவுன்சிலர்கள் தங்களின் வேட்பாளருக்கு எதிராக அணி மாறி வாக்களித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜெய்ஸ்ரீ தாகுரின் மேற்பார்வையில் சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடந்த மாநகராட்சி கட்டிடத்துக்கு 100 மீட்டர் எல்லைக்குள் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
சண்டிகர் மேயர் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அனைவரின் கவனமும், மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகள் மீது குவிந்துள்ளது. இதற்கான தேர்தல்கள் புதிய மேயரின் மேற்பார்வையில் நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment