Published : 30 Jan 2025 01:18 PM
Last Updated : 30 Jan 2025 01:18 PM
புதுடெல்லி: அரவிந்த் கேஜ்ரிவாலின் சவாலை ஏற்றுக்கொள்வது போல் நடித்த ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, யமுனை நீரைக் குடிக்கவில்லை, வாயில் வைத்துவிட்டு துப்பினார் என்று ஆம் ஆத்மி கட்சி இன்று (வியாழக்கிழமை) விமர்சித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசுகையில், "நேற்று மகா கும்பமேளாவில் மிகப்பெரிய துயரச் சம்பவம் நிகழ்ந்த நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலை விமர்சிக்கிறார். நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் முதலில் ஒரு ஜெனரேட்டர் வாங்கி வைக்க வேண்டும்என்று நாங்கள் அனைவரிடமும் கூறியிருக்கிறோம்.
யமுனை நதியில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிப்பது போல ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி ஒரு நாடகம் நிகழ்த்தியதைப் பார்த்தோம். அவர் தண்ணீரைக் குடிக்கவில்லை. நீரை வாயில் வைத்ததும் அதனைத் துப்பிவிட்டார். இதுபோன்ற நாடகங்கள் மூலம் மக்களை திசை திருப்புவதை விட, யமுனை எவ்வளவு மாசுபட்டுள்ளது என்பதை அவர் தெரிவிக்கவேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் சவாலுக்கு பதில் அளிக்கும் விதமாக டெல்லியின் பல்லா கிராமத்தில் உள்ள யமுனை நதிக்கரைக்கு வந்த ஹரியானா முதல்வர் நயார் சைனி, நதியிலிருந்து ஒரு கை தண்ணீர் எடுத்து குடித்தார். பின்பு பேசிய அவர் கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டு துரதிருஷ்டவசமானது. அரசியல் "ஆதாயங்களுக்காக மக்களின் மனதில் பயத்தை உருவாக்குகிறார்" என்றும் சாடியிருந்தார்.
ஹரியானா அரசு யமுனை நதியை விஷமாக்கி, அந்தத் தண்ணீரை டெல்லி மக்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனிடையே, டெல்லியின் பஞ்சாப் பவன் அருகே லட்சக்கணக்கான பணம், ஆம் ஆத்மி கட்சி துண்டறிக்கைகள், மதுபாட்டில்களுடன் பிடிக்கப்பட்ட பஞ்சாப் வாகனம் பற்றி பேசிய ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கர், சம்மந்தப்பட்ட அந்த வாகனம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பாஜக தொண்டருக்குச் சொந்தமானது. வாகனத்தின் நம்பர் ப்ளேட்டும் வேறு ஒரு வாகனத்தினுடையது. அப்படி ஒரு வாகனம் தங்கள் மாநிலத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதை பஞ்சாப் போலீஸ் உறுதி செய்துள்ளது என்று தெரிவித்தார்.
டெல்லி காவல்துறையின் அறிக்கை ஒன்றில், “பஞ்சாப் மாநில பதிவு எண் மற்றும் பஞ்சாப் சர்கார் என்று எழுதப்பட்ட வாகனம் ஒன்று டெல்லியின் பஞ்சாப் பவன் அருகில் நிற்பதாக ஒரு தகவல் இன்று கிடைத்தது. அந்த வாகனத்தைச் சோதனை செய்த போது, அதில் லட்சக் கணக்கான பணம், மதுபாட்டில்கள், ஆம் ஆத்மி கட்சி துண்டு பிரசுரங்களும் இருந்தன. புதுடெல்லி மாவட்டத்தின் திலக் மார்க் காவல் நிலையத்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment