Published : 30 Jan 2025 09:34 AM
Last Updated : 30 Jan 2025 09:34 AM

மகா கும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள் ரத்து: கூட்ட நெரிசல் எதிரொலியால் யோகி அதிரடி

பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த நிலையில், பிரயாக்ராஜில் இன்று (ஜன.30) முதல் விவிஐபி எனப்படும் அதி முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குவதை ரத்து செய்யும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் உ.பி. அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று பின்னிரவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் காவல் துறை உயர் அதிகாரிகள், பிரயக்ராஜ், கவுசாம்பி, வாரணாசி, அயோத்தி, மிர்சாபூர், பஸ்தி, ஜவுன்பூர், சித்ரகூட், பண்டா, அம்பேத்கர்நகர், பிரதாப்கர், சண்ட் கபீர் நகர், படோடி, ரே பரேலி, கோரக்பூர் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருடன் காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில் பிரயாக்ராஜில் இன்று (ஜன.30) முதல் விவிஐபி எனப்படும் அதி முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குதலை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் சில வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடிக்கும் படி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அவை:

> உத்தர பிரதேச மாநில எல்லைகளில் ‘பார்டர் பாயிண்ட்ஸ்’ அமைத்து அங்கேயே திரளும் கூட்டத்தை ஒழுங்கபடுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

> பிரயாக்ராஜில் இருந்து வெளியே வரும் வாகனங்கள் எந்த நெரிசலிலும் சிக்கிக் கொள்ளாமல் தங்குதடையின்றி வெளியேற போதிய ஏற்பாடுகளைச் செய்யும்படியும் வலியுறுத்தியுள்ளது.

> மகா கும்பமேளா பகுதிக்குக்குள் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. இதன் மூலம் கூட்டத்தை நிர்வகிக்கலாம்.

> விஐபிக்களின் பாஸ்கள் ரத்து செய்யலாம். பிப்ரவரி 4-ம் தேதி வரை பிரயாக்ராஜ் மாவட்டத்துக்குள் 4 சக்கர வாகனங்கள் உரிய அனுமதியின்றி வருவதை தடுக்கவும்.

> சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடவே கூடாது. சாலையோரங்களில் கடைவிரிக்கும் வியாபாரிகளை காலி இடங்களுக்கு அப்புறப்படுத்த வேண்டும்.

> பக்தர்கள் கும்ப மேளா பகுதிக்குள் முன்னேறிச் செல்வதை கூட்டத்தைப் பொறுத்து ஒழுங்குபடுத்த வேண்டும். ஒருவேளை அவர்கள் கும்பமேளா பகுதிக்குள் செல்லும் முன் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அப்பகுதியில் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.

> வாகனங்கள் பார்க்கிங்கை ஒழுங்குபடுத்த வேண்டும். தடுப்பு வேலிகளை வலுவாக அமைத்து கூட்டம் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்.

>புனித நீராடலை முடித்துவிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பொருட்டு ரயில் நிலையங்களில் திரளும் கூட்டத்தையும் முறையாக நிர்வகிக்க வேண்டும், இதில் பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர், ஏடிஜிபி ஆகியோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கூட்டத்துக்கு ஏற்ப கூடுதல் பேருந்து, ரயில் சேவைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

>பிப்ரவரி 3-ம் தேதி வசந்த பஞ்சமி நாளில் அம்ரித் ஸ்னாந் நிகழ்வு நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை காவல்துறை டிஜிபியும், தலைமைச் செயலரும் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, “நிர்வாக சீர்கேடும், பொதுவான பக்தர்களின் நலனில் கவனம் செலுத்தமால் விஐபி-க்கள் மீது மட்டும் கவனம் செலுத்தியதுமே இந்தத் துயர சம்பவத்துக்குக் காரணம். மகா கும்பமேளா நிறைவு பெற இன்னும் நிறைய நேரம் இருக்கிறது, இன்னும் பல மகாஸ்நானங்கள் நடக்க உள்ளன. இன்று நடந்தது போன்ற ஒரு துயர சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசாங்கம் அமைப்பை பலப்படுத்த வேண்டும்.

விஐபி கலாச்சாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும், மேலும், பொது பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் சிறந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இதே கருத்தினை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், யோகி ஆதித்யநாத் கும்பமேளா புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x
News Hub
Icon