Published : 30 Jan 2025 03:20 AM
Last Updated : 30 Jan 2025 03:20 AM
பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவில் புனித நீராடுவது மிகவும் புண்ணிய நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
ஜனவரி 13-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 16 நாட்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவின்போது, குறிப்பாக மவுனி அமாவாசை போன்ற சிறப்பு நாட்களில் நீராடுவது பாவங்களை போக்கி ‘மோட்சம்' அல்லது முக்திஅளிக்கும் என்று நம்பப்படுகிறது. மக மாதத்தில் (வட இந்தியாவில் கடைபிடிக்கப்படும் 12 மாதங்களில் 11-வதாக வரும் மாதம் மக) வரும் அமாவாசை மவுனி அமாவாசை (தை அமாவாசை) என்று அழைக்கப்படுகிறது. இதை யொட்டி 10 கோடி பேர் புனித நீராடுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் நேற்று அதிகாலை முதலே கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் இடத்துக்கு வந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டனர். ஆற்றுப்பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு பக்தர்கள் இறங்கியபோது திடீரென கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, கூட்ட நெரிசலில் சிக்கிய சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும், சிலர் கீழே விழுந்தனர். இதனால், கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்களும் விழுந்துள்ளனர். அப்போது பயம் காரணமாக கீழே விழுந்தவர்கள் மீது பலர் ஏறிக் குதித்து ஓடினர். பலர் அங்குமிங்கும் ஓடியதால் அந்த இடமே போர்க்களம்போல காணப்பட்டது. இதனால் பலர் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து போலீஸார், தீயணைப்பு வீரர்கள், துணை ராாணுவப் படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு உதவியாக தன்னார்வ தொண்டர்களும் செயல்பட்டனர். நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரதமர் இரங்கல்: கும்பமேளாவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கும்பமேளாவில் நடந்த துயர சம்பவம் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பேசியுள்ளேன். மேலும் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சையை வழங்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை அடுத்த புனித நீராடுவதற்கு உ.பி. அரசு சிறிது நேரம் தடை விதித்திருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் சரி செய்யப்பட்ட பின்னர், மீண்டும் பக்தர்கள் புனித நீராடும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. இறந்தவர்களில் 4 பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...