Published : 30 Jan 2025 02:31 AM
Last Updated : 30 Jan 2025 02:31 AM
மும்பையில் பெண் மென்பொறியாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியை உச்ச நீதிமன்றம் விடுவித்தது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த பெண் எஸ்தர் அனுஹ்யா (23). மும்பையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றினார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி மும்பை கன்ஜூர் மார்க் அருகே சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனத் தெரிந்தது. இவர் கடைசியாக மும்பை லோக்மான்ய திலக் ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியேறிய சிசிடிவி காட்சிகள் பதிவாகியிருந்தது. அவருடன் ஒரு நபரும் சென்றார்.
இதை வைத்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி சுந்திரபான் சுதம் சனாப் என்பவரை கைது செய்யனர். அவரது வீட்டிலிருந்து எஸ்தரின் அடையாள அட்டை உட்பட எஸ்தரின் உடமைகளை போலீஸார் மீட்டனர். பாலியல் வன்கொடுமை கொலை குற்றத்தை சனாப் ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் குற்றவாளி சனாப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து சனாப் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளி சனாப்பை விடுவித்தது. விசாரணையில் சந்தேகத்துக்கு இடமின்றி ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை அதிருப்தியடைச் செய்துள்ளது. இது குறித்து எஸ்தரின் தந்தையும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான ஜொனாதன் பிரசாத் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்னாள் நடைபெற்ற சம்பவம். முன்பு எங்களுக்கு நீதி கிடைத்ததை பாராட்டினோம். தற்போது எல்லாம் மாறிவிட்டது. இந்த வழக்கில் நேரடி சாட்சி இல்லை. போலீஸார் சிசிடிவி காட்சிகளை சேகரித்து சரியான நபரை கைது செய்து, அவரது வீட்டில் இருந்து எனது மகளின் உடமைகளை மீட்டனர். குற்றவாளியும் போலீஸாரிடமும், மாஜிஸ்திரேட்டிடமும் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆதாரங்கள் எல்லாம் விசாரணை நீதிமன்றத்துக்கும், உயர்நீதிமன்றத்துக்கும் போதுமானதாக இருந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் என்ன நடைபெற்றது என தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்படலாம் என நினைத்தோம். ஆனால், குற்றவாளி விடுவிக்கப்படுவார் என கனவிலும் நினைக்கவில்லை. விடுவிக்கப்பட்டவர் அப்பாவி என்றால், குற்றவாளி யார்?
எனது ஒட்டுமொத்த குடும்பமும் நம்பிக்கையிழந்து விட்டது. நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்ட போராட்டம் வீணாகிவிட்டது. நான் சோர்வடைந்து விட்டேன். எனக்கு 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால், இனிமேலும் போராட வலிமை இல்லை. இந்த தீர்ப்பு எனக்கு தண்டனை போல் உள்ளது. இது பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆண்டவனிடம் விட்டு விடுகிறேன். இவ்வாறு ஜொனாதன் பிரசாத் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...