Published : 30 Jan 2025 02:27 AM
Last Updated : 30 Jan 2025 02:27 AM

வக்பு மசோதா அறிக்கை சபாநாயகரிடம் இன்று ஒப்படைப்பு: முறைப்படி ஜேபிசி ஒப்புதல் வழங்கியது

திருத்தப்பட்ட வக்பு மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி வக்பு சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதாவை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) அமைக்கப்பட்டது.

பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 36 எம்.பி.க்கள் இதில் இடம்பெற்றிருந்தனர். இக்குழு கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி அமைக்கப்பட்டது முதல் 38 முறை கூடியுள்ளது. நாடு முழுவதும் பயணம் செய்து கருத்துகளை கேட்டுள்ளது.

இந்நிலையில் வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பான தனது அறிக்கையை ஜேபிசி நேற்று முறைப்படி ஏற்றுக்கொண்டது. மசோதாவின் திருத்தப்பட்ட வடிவத்தை 15-11 வாக்குகள் அடிப்படையில் ஜெகதாம்பிகா பால் உறுதிப்படுத்தினார்.

இதுகுறித்து ஜெகதாம்பிகா பால் கூறுகையில், “பல்வேறு திருத்தங்களை குழு ஏற்றுக்கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கவலைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த மசோதா நடைமுறைக்கு வரும்போது வக்பு வாரியத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் மேம்படும். பாஸ்மந்தா முஸ்லிம்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நபர்கள், பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் புதிதாக வக்பு பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எங்கள் அறிக்கை வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படும்" என்றார்.

ஜேபிசி செயல்பாடு குறித்து காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் ஆகிய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்துவந்த நிலையில் இந்த ஒப்புதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குழுவின் அறிக்கை செவ்வாய்க்கிழமை இரவுதான் கிடைத்ததாகவும் அதனை ஆய்வு செய்ய குறைந்த நேரமே இருந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

"ஏற்றுக்கொள்ளப்பட்ட மசோதா வடிவானது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. முஸ்லிம் மத விவகாரங்களில் அரசு தலையிடுவதன் மூலம் வக்பு வாரியம் வலிமை இழக்கும்" என்றும் அவர்கள் கூறினர். சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என திமுக எம்.பி. ஆ.ராசா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x