Published : 30 Jan 2025 02:23 AM
Last Updated : 30 Jan 2025 02:23 AM
உ.பி.யில் ரூ.200-க்காக 40 வயது நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த துக்கம் தாளாமல் அவரது 70 வயது தந்தை உயிரிழந்தார்.
உ.பி.யின் மீரட் மாவட்டம், பவன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் ஹோஷியார் சிங் வால்மீகி. கூலித் தொழிலாளியான இவர் அருகில் வசிக்கும் விகாஸ் குமார் என்பவரிடம் ரூ.500 கடன் வாங்கியிருந்தார். இதில் ரூ.300-ஐ திருப்பிக் கொடுத்த ஹோஷியார் சிங் ரூ.200-ஐ திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 8-ம் தேதி வீட்டில் இருந்த ஹோஷியார் சிங்கை விகாஸ் குமாரும் அவரது 3 நண்பர்களுக்கும் அருகில் உள்ள காலி நிலத்துக்கு அழைத்துச் சென்று ரூ.200-ஐ திருப்பித் தராததற்காக கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த ஹோஷியார் சிங், மீரட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் 18 நாட்களுககு பிறகு கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார்.
இதற்கிடையில் ஹோஷியார் சிங் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த அவரது நோய்வாய்ப்பட்ட 70 வயது தந்தை கடந்த 20-ம் தேதி துக்கத்தால் உயிரிழந்தார். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இருவர் இறந்ததால் குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பவன்பூர் காவல் நிலைய அதிகாரி நவீனா சுக்லா கூறுகையில், "இந்த சம்பவத்தில் 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம். விகாஸ் குமார் (24), லாலா (23) ஆகிய இருவரை கைது செய்துள்ளோம். மற்ற இருவரை தேடி வருகிறோம். கொல்லப்பட்டவர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் என அனைவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்" என்றார்.
இந்நிலையில் ஹோஷியார் சிங் தாக்கப்பட்ட 10 நாட்களுக்கு பிறகே போலீஸார் வழக்கு பதிவு செய்ததாக உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment