Published : 29 Jan 2025 04:42 PM
Last Updated : 29 Jan 2025 04:42 PM

“நான் குடிப்பதும் யமுனை நீர்தான்!” - பிரச்சாரத்தில் கேஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி பதிலடி

புதுடெல்லி: யமுனை நதியை ஹரியானா விஷமாக்கி விட்டது என்ற டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலின் பேச்சுக்கு பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார். மேலும், "நான் உட்பட டெல்லியில் உள்ள அனைவரும் ஹரியானா அனுப்பும் யமுனை நீரைத்தான் குடிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியின் கர்தார் நகரில் நடந்த பேரணிக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், "டெல்லியின் முன்னாள் முதல்வர் ஒருவர் ஹரியானா மக்கள் மீது அருவருக்கத்தக்க குற்றச்சாட்டினைச் சுமத்தியுள்ளார். தோல்வி பயத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் பதற்றமடைந்துள்ளனர். டெல்லி மக்களிடமிருந்து ஹரியானாவில் வசிப்பவர்கள் வேறுபட்டவர்களா? ஹரியானாவில் இருப்பவர்களின் உறவினர்கள் டெல்லியில் வசிக்கவில்லையா? தங்களின் சொந்த மக்கள் குடிக்கும் நீரை ஹரியானா மக்கள் விஷமாக்க முடியுமா?

இது, ஹரியானாவுக்கு மட்டுமான அவமானமில்லை. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான அவமானம். நமது மதிப்பீடுகள், குணாதிசயங்களுக்கான அவமானம். தண்ணீர் வழங்குவதை ஒரு மதமாக கருதும் நாடு இது. இதுபோன்ற தரக்குறைவான விஷயங்களைச் சொன்னவர்களுக்கு டெல்லி மக்கள் இந்த முறை பாடம் புகட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன். இந்தப் பேரழிவு மிக்க மக்களின் கப்பல் யமுனையில் மூழ்கும்.

ஹரியானா அனுப்பும் நீரைத்தான் நான் உட்பட நீதிபதிகள், அரசு அதிகாரிகள் என டெல்லியின் அனைத்து மக்களும் குடிக்கிறார்கள். மோடியைக் கொல்ல ஹரியானா யமுனையை விஷமாக்கும் என்று எப்படி நினைக்க முடியும்? ஆம் ஆத்மியின் பொய்களும் போலி வாக்குறுதிகளும் இந்த முறை செல்லுபடியாகாது என்று டெல்லி மக்கள் சொல்கிறார்கள். அவர்கள் பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சியை விரும்புகிறார்கள். அந்த ஆட்சி ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும், டெல்லியை நவீனமாக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வழங்கி, தண்ணீர் லாரி மாஃபியாவிடமிருந்து விடுதலை அளிக்கும். பிப்ரவரி 5-ம் தேதி ஆம் ஆத்மி வெளியேறும், பாஜக ஆட்சியமைக்கும் என்று டெல்லியன்ஸ் கூறுகிறார்கள்.

ஆம் ஆத்மி கட்சியினர் தாங்கள் தோல்வியடைந்துவிடுவோம் என்பதை உணர்ந்துள்ளனர். டெல்லி மக்கள் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரின் மீதும் கோபத்தில் உள்ளனர். தங்களின் வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை என்றால், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று ஆம் ஆத்மி விரும்புகிறது. இதனால் பின்பு அவர்கள் ஒன்றாக ஆட்சி அமைக்கலாம் என்று நினைக்கின்றனர். இதனால் டெல்லி இரண்டு பேரழிவு ஆட்சிகளைச் சந்திக்கும்.

நீங்கள் காங்கிரஸ் ஆட்சி மற்றும் ஆம் ஆத்மியின் 11 ஆண்டு கால ஆட்சியைப் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் டெல்லியின் பிரச்சினைகள் மட்டும் அப்படியே உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் அவர்கள் (காங்கிரஸ், ஆம் ஆத்மி) உங்களின் இரண்டு தலைமுறையினரை அழித்து விட்டனர். இங்கே இன்னும் போக்குவரத்து நெரிசல், தண்ணீர், மாசு பிரச்சினைகள் அப்படியே உள்ளன. உங்களுடைய இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் உங்களின் ஒரு வாக்கு விடுதலை அளிக்கும்.

கடந்த 11 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க வேண்டும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு திட்டமிட வேண்டும். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸின் 25 ஆண்டு கால ஆட்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இப்போது தாமரைக்கு ஒருமுறை வாய்ப்பளியுங்கள்" என்று பிரதமர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x