Published : 29 Jan 2025 12:39 PM
Last Updated : 29 Jan 2025 12:39 PM

நாடாளுமன்ற கூட்டுக் குழு வாக்கெடுப்பில் வக்பு திருத்த மசோதா ஏற்பு

வக்பு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால்

புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்ட மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பாக இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், திருத்தங்களும், மசோதாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவெடுத்த மத்திய அரசு, வக்பு (திருத்த) மசோதாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிகள் சார்பில் 16 எம்.பி.க்களும் எதிர்க்கட்சிகள் சார்பில் 10 எம்.பி.க்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இக்குழு 30 தடவைக்கு மேல் கூடி இந்த மசோதா குறித்து விவாதித்தது. அப்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றன. மசோதாவில் பல்வேறு திருத்தங்களுக்கு இரு தரப்பில் இருந்தும் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டன.

இதையடுத்து, இந்த திருத்தங்கள் மீது நேற்று முன்தினம் (ஜன. 27) வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கொண்டு வந்த 14 திருத்தங்கள் வாக்கெடுப்பு அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதேபோல், எதிர்க்கட்சிகள் தரப்பில் கொண்டு வந்த திருத்தங்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன.

திருத்தங்கள் தொடர்பான அறிக்கையும், திருத்தங்களின் அடிப்படையிலான மசோதாவும் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக இன்று மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கூட்டத்துக்குப் பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி டாக்டர் ராதா மோகன் தாஸ் அகர்வால், "வக்பு திருத்த மசோதா குறித்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 14 பேரும், எதிராக 11 பேரும் வாக்களித்தனர். பல்வேறு கட்சிகள் தங்கள் எதிர்ப்புக் குறிப்புகளைச் சமர்ப்பித்துள்ளன. அறிக்கை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும். அரசு செய்யும் பணிகளை எதிர்ப்பது எதிர்க்கட்சிகளின் வேலை. அவ்வாறு செய்வது அவர்களின் மரபணுவிலேயே உள்ளது" என தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு(ஜேபிசி) கூடுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜகதாம்பிகா பால், "நாடாளுமன்றக் கூட்டுக் குழு தயாரித்த 656 பக்க அறிக்கையை அனைத்து உறுப்பினர்களுக்கும் நாங்கள் அனுப்பி வைத்தோம். நாடாளுமன்றக் கூட்டுக் குழு விவாதங்கள் நடத்தி அதன் பிறகு அறிக்கை தயாரிக்கப்பட்டது. எனவே, இந்த அறிக்கையை கூட்டுக்குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ளும்.

வக்பு தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு இரண்டு காரணங்களுக்காக இந்த நாள் ஒரு முக்கியமான நாள். நாங்கள் எங்கள் அறிக்கைகளை மக்களவை சபாநாயகரிடம் சமர்ப்பித்து அதை ஏற்றுக்கொள்ளச் செய்வோம். மேலும், திருத்தப்பட்ட மசோதாவையும் ஏற்றுக்கொள்ளச் செய்வோம். ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது ஒரு உறுப்பினரின் உரிமை. அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், நான் சபாநாயகருக்குத் தெரிவிப்பேன், அவர் நடைமுறையின்படி செயல்படுவார்.” என குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x