Published : 28 Jan 2025 04:34 PM
Last Updated : 28 Jan 2025 04:34 PM
புதுடெல்லி: பாக்.ஜலசந்தியில் காரைக்கால், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர், மூவர் காயமடைந்தனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கவேல், தினேஷ், காரத்திகேசன், செந்தமிழ், பட்டினச்சேரியை சேர்ந்த மைவிழிநாதன், வெற்றிவேல், தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடியை சேர்ந்த நவெந்து, வானகிரியை சேர்ந்த ராஜேந்திரன், ராம்கி, நாகை மாவட்டம் நம்பியார் நகர் சசிகுமார், நந்தகுமார், பாபு, குமரன் ஆகிய 13 பேர் கடந்த 26-ம் தேதி காலை 10 மணியளவில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
நேற்று இரவு 9.30 மணியளவில் கோடியக்கரைக்கு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 13 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர். மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டபோது படகிலிருந்து தவறி கடலில் விழுந்த இரண்டு மீனவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் தரப்பில், ‘பாக் ஜலசந்தியில் உள்ள டெல்ஃப்ட் தீவுக்கு அருகே இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், இருவர் படுகாயமடைந்தனர், மேலும் மூவர் காயமடைந்தனர். 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. படுகாயமடைந்த இரண்டு மீனவர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அங்கு இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களுக்கு உதவி வழங்க சென்றனர்.
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம், டெல்லியில் உள்ள இலங்கையின் (பொறுப்பு) தூதரை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலமும் இந்தப் பிரச்சினையை இலங்கை அதிகாரிகளிடம் எழுப்பியது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வலியுறுத்தல்: மேலும், “எந்தச் சூழ்நிலையிலும் இத்தகைய தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. மீனவர்களின் பிரச்சினைகளை அவர்களின் வாழ்வாதாரக் கவலைகளைக் கருத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும். மேலும், மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று இலங்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...