Published : 28 Jan 2025 03:20 PM
Last Updated : 28 Jan 2025 03:20 PM
புவனேஸ்வர்: இந்தியாவில் இருந்து மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதும், வெளிநாடுகளில் மதிப்புக்கூட்டப்பட்டு பின் அவற்றை இந்தியாவுக்கு அனுப்புவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மதிப்பு கூட்டல்கள் இந்தியாவில் நடக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரின் நடைபெற்ற 'மேக் இன் ஒடிசா' மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "கிழக்கு இந்தியாவை நாட்டின் வளர்ச்சி இயந்திரமாகக் கருதுகிறேன். அதில் ஒடிசா முக்கிய பங்கு வகிக்கிறது.
மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகிவிடாது. எனவே, நாங்கள் முழு சூழல் அமைப்பையும் மாற்றுகிறோம். ஒரு புதிய தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகிறோம்.
கனிமங்கள் இங்கு பிரித்தெடுக்கப்பட்டு மதிப்பு கூட்டல் செய்யப்படுவதற்காக; புதிய பொருட்களை தயாரிப்பதற்காக வேறு சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் பின்னர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. இந்தப் போக்கு மோடிக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
இன்று, கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்களால் இயக்கப்படும் வளர்ச்சிப் பாதையில் இந்தியா நகர்கிறது. இது செயற்கை நுண்ணறிவு (AI) சகாப்தம். எல்லோரும் AI பற்றிப் பேசுகிறார்கள். இருப்பினும், இந்தியாவின் விருப்பம் வெறும் AI மட்டுமல்ல. நமது விருப்பம் நமது நாட்டின் சக்தி. மக்களின் தேவைகள் நிறைவேறும்போது விருப்பம் வளர்கிறது. கடந்த பத்தாண்டுகளில், கோடிக்கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் பலனை நாடு கண்டுள்ளது. ஒடிசா அதே விருப்பத்தை பிரதிபலிக்கிறது.
முன்னோடியில்லாத வேகத்திலும் அளவிலும் சிறப்பு உள்கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. இது இந்தியாவை முதலீட்டிற்கான சிறந்த இடமாக மாற்றும். கிழக்கு இந்தியாவை நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக நான் கருதுகிறேன், இதில் ஒடிசா முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளாவிய வளர்ச்சிக்கு இந்தியா கணிசமாக பங்களித்த காலங்களில், கிழக்கு இந்தியாவும் முக்கிய பங்களிப்பை வழங்கியது என்பதை வரலாறு காட்டுகிறது.
ஒடிசா விரைவில் யாரும் நினைத்துப் பார்க்காத வளர்ச்சியின் உச்சத்தை எட்டும் என்று நான் நம்புகிறேன். முதல்வர் மோகன் சரண் மஞ்ஜியின் முழு குழுவும் மாநிலத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த உறுதிபூண்டுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆராய்ச்சிக்கான துடிப்பான சூழல் அமைப்பை உருவாக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது, அதற்காக ஒரு சிறப்பு நிதியும் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்கள் நிறுவனங்கள் முன்வந்து அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
ஒடிசா மிக நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. இங்குள்ள பழைய துறைமுகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. புதிய துறைமுகங்களும் கட்டப்பட்டு வருகின்றன. மாநிலம் மகத்தான சுற்றுலா ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்தியாவில் திருமணங்களை நடத்துவது, மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வது அதிகரித்து வருகிறது. நாட்டின் இயற்கை அழகு இதற்கு உகந்ததாக உள்ளது" என தெரிவித்தார்.
இந்த மாநாட்டில், வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால், ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் தலைவர் நவீன் ஜிண்டால் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சில தொழிலதிபர்கள் உட்பட சுமார் 7,500 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...