Last Updated : 28 Jan, 2025 04:58 AM

 

Published : 28 Jan 2025 04:58 AM
Last Updated : 28 Jan 2025 04:58 AM

நில முறைகேடு வழக்கில் சித்தராமையாவின் மனைவியிடம் விசாரிக்க இடைக்கால தடை

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் அவரது மனைவி பார்வதி, அமைச்சர் பைரத்தி சுரேஷ் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

இதையடுத்து முதல்வர் சித்தராமையா, மனைவி பார்வதி மற்றும் உறவினர்கள் 2 பேர் மீது நில‌ முறைகேடு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறையும் லோக் ஆயுக்தாவும் இவ்வழக்கை விசாரித்து வருகிறது.

சித்தராமையாவின் உறவினர்கள் மல்லிகார்ஜுன சுவாமி, தேவராஜ் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த நவம்பரில் சோதனை நடத்தினர். அதில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மல்லிகார்ஜுன சுவாமி, தேவராஜ் ஆகியோரிடம் விசாரணையும் நடத்தினர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ரூ.300 கோடி மதிப்பிலான 143 அசையா சொத்துகளை முடக்கியும் உத்தரவிட்டது.

இந்நிலையில் அமலாக்கத்துறை நேற்று, முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி, வீட்டு வசதித்துறை அமைச்சர் பைரத்தி சுரேஷ் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் பார்வதி ஜனவரி 28-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு பெங்களூருவில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் அமைச்சர் பைரத்தி சுரேஷ் ஆஜராக வேண்டிய நேரம் குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x