Published : 27 Jan 2025 06:36 PM
Last Updated : 27 Jan 2025 06:36 PM
டேராடூன்: நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட்டில் பொது சிவில் சட்டம் திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. பழங்குடியினர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தவிர மற்ற அனைவருக்கும் பொது சிவில் சட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என பாஜக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. கடந்த 2022 உத்தராகண்ட் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து. அதன் அடிப்படையில் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியது. இந்நிலையில், இந்த சட்டம் இன்று (ஜன.27) முதல் அம்மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று மாநிலத்தின் பொது சிவில் சட்டத்தை (UCC) அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தினார். மேலும், பொது சிவில் சட்ட பதிவுகளுக்காக உருவாக்கப்பட்ட ucc.uk.gov.in எனும் அரசு வலைதளத்தில் அவர் தன்னைப் பதிவு செய்தார். அதோடு, திருமணங்கள், விவாகரத்து ஆகியவற்றை ஆன்லைனில் பதிவு செய்வதை கட்டாயமாக்கும் விதிகளையும் முதல்வர் வெளியிட்டார்.
அப்போது அவர், "மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் திறமையான தலைமையின் கீழ், எங்கள் அரசு இன்று உத்தராகண்டில் பொது சிவில் சட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இன்று இந்த மாநில மக்களுக்கும் அனைத்து நாட்டு மக்களுக்கும் ஒரு சிறப்பு நாள். உத்தராகண்டிலிருந்து வெளிப்படும் இந்த சமத்துவ நீரோடை எதிர்காலத்தில் நாடு முழுவதும் பாயும் என்று நான் நம்புகிறேன்.
சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் புதிய சகாப்தத்தின் தொடக்கம்தான் பொது சிவில் சட்டம். எனது அரசு, மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகள் இருக்கும் என்று உறுதியளித்துள்ளது. பொது சிவில் சட்டத்தை செயல்படுத்துவதற்கான தீர்மானத்தை அடைவதற்கான பாஜகவின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது" என தெரிவித்தார்.
உத்தராகண்டில் அமலுக்கு வந்த பொது சிவில் சட்டத்தில் பழங்குடியினர் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர மாநிலத்தில் இருக்கும் அனைவருக்கும் இன்று முதல் பொது சிவில் சட்டம் பொருந்தும். சுதந்திரத்துக்குப் பிறகு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமாக உத்தராகண்ட் மாறியுள்ளது.
உத்தராகண்ட் யுசிசி-யின் சிறப்பு அம்சங்கள்: உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தில் திருமணம், லிவ்-இன் உறவு சார்ந்து சில முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி திருமண வயது இருபாலருக்கும் 21 என ஆக்கப்படுகிறது. இதன்மூலம் முறையாக கல்வி பயின்று வேலை பெறுவதற்கு முன்னர் திருமணங்கள் செய்து கொள்வதும் குறையும் என அரசு கூறுகிறது. அதேபோல் அனைத்து திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அம்சம் இச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் லிவ்-இன் உறவில் இருப்போர் 21-வது வயதுக்குக் கீழ் உள்ளவராக இருந்தால் அவர்கள் பெற்றோர் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். லிவ்-இன் உறவையும் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அல்லது தவறான தகவல் தெரிவித்தால் 3 மாதம் சிறை அல்லது ரூ.25,000 அபராதம் அல்லது இந்த இரண்டுமே விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கண்டனம்: இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி இச்சட்டம் குறித்து கூறுகையில், “பொது சிவில் சட்டத்துக்கு ஒருமித்த ஆதரவு இல்லாத நிலையில், மிக முக்கியமான முன்னோடி திட்டத்தை அவசரமாக நடைமுறைப்படுத்தும் விதமாக அதனை உத்தராகண்டில் அமல்படுத்தியுள்ளீர்கள். பொது சிவில் சட்டம் என்பதிலேயே பொது என்ற வார்த்தை இருக்கிறது. அப்படியென்றால் அதை பொதுவாக இந்தியா முழுமைக்கும் தான் அமல்படுத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சட்டத்தை நிறைவேற்றினால், அது எப்படி பொது சிவில் சட்டம் ஆகும்” என்று பாஜகவை விமர்சித்து, பல்வேறு கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...