Published : 26 Jan 2025 04:34 PM
Last Updated : 26 Jan 2025 04:34 PM

''பணக்காரர்கள் 400-500 பேரின் ரூ.10 லட்சம் கோடி கடனை பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளது'' - கேஜ்ரிவால் விமர்சனம்

புது டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 400-500 நபர்களின் ரூ.10 லட்சம் கோடி கடன்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளதாக அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை ‘முக்கியமான பிரச்சினை’ குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், "டெல்லி மக்கள் முன்னால் இரண்டு மாடல்கள் உள்ளன. ஒன்று மக்கள் பணம் மக்களுக்கு செலவு செய்யப்படும் என்ற கேஜ்ரிவால் மாடல். இரண்டாவது, பொதுமக்களின் பணத்தினை சில பணக்கார நண்பர்களின் பைகளுக்கு கொண்டு செல்லும் பாஜக மாடல். தற்போது எந்த மாடலை தேர்வு செய்ய வேண்டும் என்று டெல்லி மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

ஆம் ஆத்மி தலைமையிலான அரசில் டெல்லி மக்கள் ரூ. 25,000 வரை மாதம் தோறும் நலத்திட்ட உதவிகளாகப் பெறுகின்றனர். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அவை அனைத்து நிறுத்தப்படும். எனென்றால் அவை அவர்களின் மாடலுக்கு எதிரானது." என்று தெரிவித்தார்.

மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஆட்சியமைக்க 36 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

டெல்லியில் வரவிருக்கும் பேரவைத்தேர்தலில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் தீவிரத்தில் ஆம் ஆத்மி கட்சி உள்ளது. அதனைத் தடுத்து, தேசிய தலைநகரில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும், காங்கிரஸும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த மும்முனைப் போட்டியில் மூன்று கட்சிகளும் முக்கிய பிரச்சினைகளை முன்னிறுத்தி வருகின்றன. அதில் தற்போதைய பிரச்சினை யமுனை நதிநீர் தூய்மை.

புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக களமிறங்கும் பாஜக வேட்பாளரான பர்வேஷ் வர்மா சனிக்கிழமை யமுனை நதியை தூய்மைப்படுத்துவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதால், கேஜ்ரிவால் கட் அவுட்டை யமுனை நிதியில் மூழ்கடித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதற்கு பதிலடியாக ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காகர், "விளம்பரம் பெறுவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக" பர்வேஷ் வர்மாவை சாடியிருந்தார். அவரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரவிந்த் கேஜ்ரிவால் பொதுமக்களின் பணத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x