Last Updated : 26 Jan, 2025 01:53 AM

 

Published : 26 Jan 2025 01:53 AM
Last Updated : 26 Jan 2025 01:53 AM

மகா கும்பமேளாவில் கண்ணீர் மல்க துறவறம் ஏற்ற நடிகை மம்தா குல்கர்னி

பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருந்தவர் மம்தா குல்கர்னி. இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தியத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நிழல் உலக தாதாக்களுடன் இவருக்குத் தொடர்பு உள்ளிட்ட பல சர்ச்சைகள் இவருக்கு எதிராக கிளம்பின. இதனால், கடந்த 34 வருடங்களுக்கு முன் அவர் வெளிநாடுகளில் தங்கத் துவங்கினார்.

இதைத் தொடர்ந்து மெல்ல மெல்ல திரைப்படங்களில் நடிப்பதிலிருந்தும் விலகியவர், 2012-ல் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு வந்திருந்தார். இதையடுத்து ஆன்மிக பாதையில் அவருக்கு ஈடுபாடு எழுந்தது.

மேலும், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்திலும் அவர் அவ்வப்போது பதிவுகளையும் இட்டு வந்தார். இதனிடையே, தனது கடைசி பதிவில் அவர், நீண்ட ருடங்களுக்கு பிறகு தாய்நாடான இந்தியா வருவதாகத் தெரிவித்திருந்தார்.மேலும், பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவுக்கும் சென்று முழுமையானத் துறவறம் மேற்கொள்ளப் போவதாகவும் பதிவிட்டிருந்தார்.

இதன்படி அவர் நேற்று மகா கும்பமேளாவின் செக்டர் 16-ல் உள்ள கின்னர் அகாடாவுக்கு வந்தார். அதன் தலைவரான ஆச்சார்யா டாக்டர் லஷ்மி நாராயண் திரிபாதியிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவரிடம் தனக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும்படியும், முழுத்துறவறம் மேற்கொள்ளத் தயார் எனவும் தெரிவித்தார். இதற்கான நிபந்தனைகளையும் நடிகை மம்தா குல்கர்னி ஏற்றார்.

இதற்காக மம்தா, இறந்தபின் அவர்களது குடும்பத்தார் செய்யும் பிண்டதானச் சடங்கை அவர் தனக்குத் தானே செய்து கொண்டார். தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் புனிதக் குளியலை முடித்தவருக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும் முறைகள் துவங்கின. இதை கின்னர் அகாடாவுக்காக ஜுனா அகாடாவினர் செய்து வைத்தனர்.

நேற்று முன்தினம் மாலை முடிந்த நிகழ்ச்சியில் மம்தா குல்கர்னி, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க பேசினார். பின்னர் அவருக்கு கின்னர் அகாடா சார்பில் மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பின் மம்தாவுக்கு ஷியாமாய் மம்தாணந்த் கிரி என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ருத்ராட்ச மாலைகள் அணிந்து காவி உடையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: எனக்கு காளி மாதா இட்ட கட்டளையின்படி எனது புதிய குருவாக கின்னர் அகாடாவின் தலைவர் லஷ்மி நாராயண் திரிபாதியை ஏற்றுள்ளேன். முழுத்துறவறம் பூண்டதால் மகா மண்டலேஷ்வர் பதவி எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனது ரசிகர்கள் என்னை இண்டும் பாலிவுட்டுக்குத் திரும்பும்படி வலியுறுத்துகின்றனர். ஆனால், இதை ஏற்கப் போவதில்லை. மகா காளி உத்தரவின்றி எதுவும் நிகழாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாலிவுட் நடிகைகளில் முதலாவதாகத் துறவறம் பூண்டவராக மம்தா குல்கர்னி கருதப்படுகிறார். துறவறம் ஏற்ற பின்னர், கின்னர் அகாடாவின் மதுரா முகாமில் தங்கி இந்துமதத்தை வளர்க்கப் பிரச்சாரம் செய்ய உள்ளார். தன் நடிப்பை தொடர தடையில்லை எனக் கூறும் கின்னர் அகாடா, இனி மம்தா ஆன்மிகத் திரைப்பாடங்களில் மட்டுமே நடிக்கலாம் என அனுமதித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x