Published : 25 Jan 2025 09:09 AM
Last Updated : 25 Jan 2025 09:09 AM
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கில்லியன் பேர் சிண்ட்ரோம் (Guillain-Barre Syndrome) என்ற ஆட்டோ இம்யூன் நோய் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. இதுவரை 73 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் இத்தனை பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த நோய் குறித்து மகாராஷ்டிரா சுகாதாரத் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
ஆட்டோ இம்யூன் நோய் என்றால் என்ன? ஆட்டோ இம்யூன் நோய்கள் (AID - Auto-Immune diseases) என்பவை, நம் நோய் எதிர்ப்பு மண்டலம், தவறுதலாக, நம் உடலின் ஆரோக்கியமான செல்களைத் தாக்குவதால் ஏற்படும் நோய்கள். அத்தகைய நோய் தான் கில்லியன் பேர் சிண்ட்ரோம் என்ற நோய்.
பாதிப்புகள் என்ன? கில்லியன் பேர் சிண்ட்ரோம் நோய் தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் கை, கால் தசைகள் வலுவிழக்கும். முதலில் மதமதப்பு போல் தொடங்கி பின்னர் தசை செயலிழப்பு வரை செல்லக்கூடும்.
அதேபோல் உணவு, தண்ணீரை உட்கொள்வதில் சிக்கல் ஏற்படும், பேசுவதிலும் சிரமம் உருவாகும், மூச்சுத் திணறல், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்ப்டலாம். மிக மோசமான பாதிப்பாக பக்கவாதம் கூட வரலாம். தீவிர பாதிப்பு ஏற்பட்டால் வெண்டிலேட்டர் (செயற்கை சுவாசம்) தேவைப்படும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். கில்லியன் பேர் சிண்ட்ரோம் நோய்க்கு ஆண், பெண் என்ற பாலின பேதம் இல்லை. மேலும் இது அனைத்து வயதினரையும் பாதிக்கக் கூடியது. என்றாலும் குழந்தைகளைவிட பெரியவர்கள் மத்தியிலேயே இதுவரை பாதிப்பு அதிகமாகப் பதிவாகியதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஒரே வாரத்தில்.. புனே நகரில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 73 ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிக்கப்பட்டார்களில் 47 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள். இவர்களில் 14 பேர் தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
கில்லியன் பேர் சிண்ட்ரோம் தொற்று நோயா? இந்நிலையில் மகாராஷ்டிரா சுகாதாரத் துறை சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து திடீரென இத்தனை பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணங்களை அறியும் பணியில் ஈடுபட்டுள்ளது. புனே மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என நோய் பாதித்தோர் சார்ந்த இடங்களில் ஆய்வு நடைபெறுகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் 24 பேருக்கு கில்லியன் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதால் ஆய்வு, கண்காணிப்பை மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும் இது தொற்றுநோய் அல்ல என்றும் மக்கள் இந்த நோய் பாதிப்பு குறித்து பீதியடைய வேண்டாம் என்றும் மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment