Last Updated : 07 Jul, 2018 07:35 PM

 

Published : 07 Jul 2018 07:35 PM
Last Updated : 07 Jul 2018 07:35 PM

‘சுதந்திரத்துக்காக கிறிஸ்தவர்கள் போராடவில்லையா?’- சர்ச்சையாகப் பேசிய பாஜக எம்.பி.க்கு கிறிஸ்தவ அமைப்பு பதிலடி

கிறிஸ்தவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக எம்.பி. கோபால் ஷெட்டிக்கு கிறிஸ்தவ அமைப்புகள் பதிலடி அளித்துள்ளன.

மும்பையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மும்பை வடக்குத் தொகுதி பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ''கிறிஸ்தவர்கள் எல்லாம் ஆங்கிலேயர்கள். அவர்கள் யாரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்தியா இந்துக்கள், முஸ்லிம்களிடம் இருந்து விடுதலை பெறவில்லை, நாம் விடுதலைக்காகப் போராடினோம்'' எனப் பேசி இருந்தார்.

இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்குக் கிறிஸ்தவ அமைப்புகள், பல்வேறு தரப்புகள், எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அசோகா சவான் கடும் கண்டனம் தெரிவித்து பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இதையடுத்து, தான் அவ்வாறு பேசவில்லை. என்னுடைய பேச்சு, தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி விளக்கம் அளித்தார். இந்தக் காரணங்களுக்காக என் மீது புகார் கூறினால் நான் பதவி விலகவும் தயார் எனப் பேசி இருந்தார்.

இதற்கிடையே ஃபாதர் சாலமன் ஜார்ஜ் இன்று விடுத்த அறிவிப்பில், ''பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி வரலாறு அறிந்து பேச வேண்டும். சுதந்திரப் போராட்டத்தை நன்கு படித்துவிட்டு, ஆய்வுசெய்து கிறிஸ்தவர்கள் பங்கு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு கிறிஸ்தவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. நாடு சுதந்திரம் அடைந்ததற்குக் கிறிஸ்தவர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர் என்பதை வரலாற்றின் மூலம் நாம் அறியலாம். குறிப்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த தேவர்துண்டியில் திதஸ் என்ற திதுஸ்ஜி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.

தேவர்துண்டியில் திதஸ் என்ற திதுஸ்ஜி: கடந்த 1930-ம் ஆண்டு நடந்த தண்டியாத்திரையில் பங்கேற்ற ஒரே கிறிஸ்தவர் திதுஸ்ஜி ஆவர். அகமதாபாத் அருகே காந்தியின் சபர்மதி பால் திட்டத்தில் அரசின் செயலாளராக திதுஸ்ஜி இருந்துள்ளார். பழைய 500 ரூபாய் நோட்டில் காந்தியின் தண்டியாத்திரை போராட்டத்தில் திதுஸ்ஜி படம் அமைந்திருக்கும். திதுஸ்ஜி என்ற பெயர் காந்தியால் வழங்கப்பட்டது.

ராமசாமி பால்: சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, உப்பு சத்தியாகிர போராட்டத்தில் ஈடுபட்டவர். அப்போது ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் வெளியே வந்து, திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியை நிறுவினார்.

உபாத்யாயே பிரம்மபந்தவ்: பத்திரிகையாளராகவும், சுதந்திரப் போராட்டவீரராகவும் இருந்து, பின்னர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார். சந்தியா நாளேட்டின் ஆசிரியராக உபாத்யாயே இருந்தார்.

காளி சரண் பானர்ஜி: மேற்குவங்காள மாநிலத்தைச் சேர்ந்த காளி சரண் பானர்ஜி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினரான பானர்ஜி வேதாந்தா அடிப்படையிலான கிறிஸ்தவ தத்துவவியல் நிறுவனத்தை நிறுவியவர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது தேசவிரோத சட்டத்தின் காளி சரண் பானர்ஜி கைது செய்யப்பட்டார்.

அக்கம்மா செரியன்: கேரள மாநிலம் திருவாங்கூரின் ஜான்சி ராணியாக அறியப்படுவர் அக்கம்மா செரியன். சுதந்திரப் போராட்ட காலத்தில் தனது ஆசிரியர் பணியைத் துறந்து போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சிக்கு தடை விதிக்கப்பட்ட போது, தம்பனூரில் இருந்து, கவுதியார் அரண்மனை வரை மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியவர் அக்கம்மா செரியன் என்பது குறிப்பிடத்தக்கது.

குமரப்பா: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரப்பா, சத்தியாகிரகப் போராட்டம், சுதந்திரப் போராட்டத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். காந்தியின் தண்டியாத்திரை தொடங்கியபோது, யங் இந்தியா பத்திரிகையில் தொடர்ந்து புரட்சிகரமான கட்டுரைகள் எழுதியவர் குமரப்பா. இதற்காக ஆங்கிலேயர்களால் சிறைக்கு அனுப்பப்பட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில்பங்கேற்று குமரப்பா சிறை சென்றார். கிறிஸ்தவரான குமரப்பா, ஏராளமான கிறிஸ்தவர்களை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட தூண்டுகோலாக இருந்தார். மேலும் ஜோஹிம் ஆல்வா, சார்லஸ் ப்ரீ ஆன்ரூஸ், ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து வந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட குறிப்பிடத்தக்க தலைவர்கள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x