Last Updated : 16 Jul, 2018 12:47 PM

 

Published : 16 Jul 2018 12:47 PM
Last Updated : 16 Jul 2018 12:47 PM

உ.பி.யில் தொடரும் அவலம்: பெண் குழந்தை பெற்றெடுத்ததற்காக முத்தலாக்

உத்தரப் பிரதேசத்தில் பெண் குழந்தை பெற்றெடுத்ததற்காக முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்ததாக கணவன் பற்றி பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் ஒரு வாரத்திற்கு முன்,  பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதனால் அவரது கணவரது வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணவரும் அவரது சகோதரிகளும் பெண் குழந்தை பெற்றெடுத்ததற்காக அப்பெண்ணை அடித்துக் கொடுமை படுத்தினர்.

அதுமட்டுமின்றி ஆண் குழந்தை பெற்றெடுக்காமல் பெண் குழந்தை பெற்றெடுத்ததால் தனியே வரதட்சணை வாங்கி வரவேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இப்பெண்ணின் பெற்றோரிடமிருந்து ஒரு பைக்கும் பணமும் வாங்கிவர வேண்டுமென அனுப்பியுள்ளனர். அதற்கு வாய்ப்பில்லை என்று அறிந்தபோது இப்பெண்ணின் கணவர் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்துள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகியுள்ளன.

குழந்தை பெற்று ஒரு வாரம் ஆன நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து வந்துள்ள நிலையில் அப்பெண்ணின் குடும்பம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் ஷோக் குமார் கூறுகையில், ''அப்பெண்ணின் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது'' என்றார்.

பெண் உயிரிழந்த சம்பவம்

இதே மாநிலத்தில், தொலைபேசியில் முத்தலாக் கூறி விவாகரத்து அளித்ததோடு தனி அறையில் அடைக்கப்பட்ட பெண் பட்டினியால் வாடி உயிரிழந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இன்னொரு முத்தலாக் கொடுமை தொடர்ந்து அரங்கேறி வருவது வருத்தத்தை தருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x