Published : 20 Jan 2025 02:39 AM
Last Updated : 20 Jan 2025 02:39 AM
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா முகாமில் 2 சிலிண்டர்கள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ அணைக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக பல்லாயிரக்கணக்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒரு முகாமில் நேற்று மாலை 2 சிலிண்டர்கள் வெடித்ததில் அந்த முகாம் தீப் பிடித்து எரிந்தது. பின்னர் தீ 18 முகாம்களுக்கு மளமளவென பரவியது. இதையடுத்து, பக்கத்து முகாம்களில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதனிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகளை அனுப்பி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு தீ விபத்து குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து அகாடா காவல் நிலைய உயர் அதிகாரி பாஸ்கர் மிஸ்ரா கூறும்போது, “செக்டார் 19 பகுதியில் உள்ள முகாமில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துவிட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை” என்றார்.
மகா கும்பமேளா எக்ஸ் வலைதள பக்கத்தில், “மகா கும்பமேளாவில் தீ விபத்து ஏற்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும் அரசு நிர்வாகம் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. அனைவரின் பாதுகாப்புக்காகவும் கங்கா தேவியிடம் பிரார்த்தனை செய்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment