Published : 18 Jan 2025 06:09 AM
Last Updated : 18 Jan 2025 06:09 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கடந்த 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு துறவிகளுக்காக உள்ள 13 வகை அகாடாக்கள் இங்கு முகாமிட்டு கல்பவாசம் செய்கின்றனர்.
அகாடாக்களில் உள்ள துறவிகளின் செயல்கள் பக்தர்களை கவரும் வகையில் உள்ளன. மகா கும்பமேளாவில் பங்கேற்றுள்ள துறவிகளில் ஒருவர் பெயர் புறா பாபா. இவரது தலையில் எந்நேரமும் ஒரு புறா அமர்ந்துள்ளது.
இதுகுறித்து புறா பாபா என்று அழைக்கபடும் துறவி ராஜ்புரி மகராஜ் கூறுகையில், “எனது தலையில் இந்த புறா கடந்த 9 ஆண்டுகளாக அமர்ந்துள்ளது. ஹரிபுரி எனும் இந்த புறா 24 மணி நேரமும் என்னை பிரியாமல் இருக்கிறது. நான் கடந்த 3 ஆண்டுகளாக ஹரிபுரியுடன் கும்பமேளாவுக்கு வந்து புனித நீராடுகிறேன்” என்றார்.
மற்றொரு துறவி ரமேஷ் குமார் மாஞ்சி ‘காட்டேவாலா பாபா (முள் பாபா)’ என்பவரும் பக்தர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார். இவர் தனது முகாம் முன்பாக முட்களை கொட்டி அதன் மீது படுத்து தவம் செய்கிறார். இந்த காட்சியை கும்பமேளா வரும் பக்தர்கள் கண்டு வியப்படைகின்றனர். உள்ளூர் செய்தி சேனலின் நிருபர் ஒருவர், வீடியோ கேமராவுடன் சென்று ‘இந்த முட்கள் உண்மையானவையா?’ என்று கேட்டுவிட்டார். அதை கேட்ட முள் பாபா, நிருபரின் கன்னத்தில் அறைந்துவிட்டார்.
அவரது சட்டையை பிடித்து இழுத்து, வா வந்து நீயே இந்த முள் படுக்கையில் படுத்து சோதித்துக் கொள்” என்று கோபமாக கூறினார். அதை பார்த்த பக்தர்கள், அந்த நிருபருக்கு பாபாவின் ஆசி கிடைத்துவிட்டதாக கிண்டல் செய்தனர். அந்தக் காட்சிகளை ஒருவர் தன் செல்போனில் பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment