Published : 17 Jan 2025 02:12 AM
Last Updated : 17 Jan 2025 02:12 AM
கர்நாடகாவில் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பச் சென்ற ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு, ரூ.93 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பீதர் மாவட்டம், சிவாஜி சவுக் பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம் உள்ளது. அங்கு நேற்று காலை 11.30 மணிக்கு பணத்தை நிரப்புவதற்காக சிஎம்எஸ் ஏஜென்சியை சேர்ந்த கிரி வெங்கடேஷ், சிவகுமார் ஆகிய 2 ஊழியர்கள் வந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் அவர்களின் கண்களில் மிளகாய் பொடியை தூவினர்.
இதனால் ஊழியர்கள் கண் எரிச்சலில் நிலைதடுமாறி விழுந்த நிலையில் அவர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பிறகு பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பினர்.
துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த ஊழியர்கள், அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலே கிரி வெங்கடேஷ் உயிரிழந்தார். சிவகுமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இதுகுறித்து பிடதி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஎம் மையத்தில் இருந்து சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீஸார் கைப்பற்றி கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்கள் ரூ.93 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிடதியில் பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...