Published : 17 Jan 2025 01:51 AM
Last Updated : 17 Jan 2025 01:51 AM
ஹரியானாவில் எம்பிபிஎஸ் செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஹரியானாவின் ரோத்தக் நகரில் பண்டிட் பகவத் தயாள் சர்மா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இது ஹரியானா அரசின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி ஆகும். இந்த மருத்துவக் கல்லூரியின் எம்பிபிஎஸ் செமஸ்டர் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வீடியோ ஆதாரத்தை ஒரு மாணவர் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து ரோத்தக் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: பண்டிட் பகவத் தயாள் சர்மா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சில ஊழியர்கள் எம்பிபிஎஸ் செமஸ்டர் தேர்வில் முறைகேடுகளை செய்துள்ளனர். இதன்படி குறிப்பிட்ட சில மாணவர்கள், அழிந்து போகும் மையை பயன்படுத்தி செமஸ்டர் தேர்வு எழுதி உள்ளனர். தேர்வு எழுதிய சில மணி நேரங்களில் அந்த மை அழிந்துவிடும்.
செமஸ்டர் தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்கள் குறிப்பிட்ட ஊழியர் ஒருவரின் வீட்டுக்கு சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அந்த ஊழியரின் வீட்டுக்கு மருத்துவ மாணவர்கள் சென்று, பாடப்புத்தகங்களின் உதவியுடன் தங்களது விடைத்தாளில் சரியான விடைகளை எழுதி உள்ளனர்.
இவ்வாறு ஒரு பாடத்துக்கு தேர்வு எழுத ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோ ஆதாரம் வெளியானதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக பண்டிட் பகவத் தயாள் சர்மா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ரோஷன் லால், ரோஹித் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தீபக், இந்து, ரித்து ஆகியோரும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். நீட் நுழைவுத் தேர்வு மற்றும் மருத்துவம் சார்ந்த இதர நுழைவுத் தேர்வுகளிலும் இவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம்.
ஹரியானாவில் உள்ள வேறு சில தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் எம்பிபிஎஸ் செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment