Published : 16 Jan 2025 03:11 AM
Last Updated : 16 Jan 2025 03:11 AM

பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி உள்ளனர்: ராகுல் காந்தி கடும் தாக்கு

ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்ததாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறிய கருத்து தேசத்துரோகமாகும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசியதாவது: மிகவும் முக்கியமான நேரத்தில் புதிய தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளோம். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று பேசும்போது, 1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையவில்லை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட போதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது என்று கூறி இருந்தார்.

ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்ததாக மோகன் பாகவத் கூறிய கருத்து தேசத்துரோகமாகும். இந்த காங்கிரஸ் கட்டிடம் சாதாரணமானது அல்ல. இது லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் விளைவு. சுதந்திரப் போராட்டத்தின் மிகப் பெரிய பலன் நமது அரசியலமைப்பு ஆகும். மோகன் பாகவத் பேசும்போது, அரசியலமைப்பு நமது சுதந்திரத்தின் சின்னம் அல்ல என்று மறைமுகமாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி எப்போதும் உயர் மதிப்பீடுகளைக் காக்க பாடுபட்டு வருகிறது. அத்தகைய மதிப்பீடுகள், இந்தக் கட்டிடத்தில் பிரதிபலிக்கப்படுகின்றன.

பாஜக, ஆர்எஸ்எஸ் என்ற அரசியல் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அவர்கள் நாட்டில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி உள்ளனர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக மட்டுமல்லாமல் இந்திய அரசையே எதிர்த்துப் போராடுகிறோம்.

குற்றங்களை விசாரிக்க வேண்டிய மத்திய புலனாய்வு அமைப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசால் பயன்படுத்தப்படுகின்றன. பாஜகவின் கருத்துகள் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தி இருக்கின்றன. நமது நாட்டில் இருவிதமாக கருத்து மோதல்கள் இருக்கின்றன. அவை அரசியலமைப்பு மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே ஏற்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா பேரவைத் தேர்தலில் தகவல்களைத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால், அவர்கள் எங்களுக்குத் தர மறுத்துவிட்டனர் இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

பாஜக பதிலடி: இந்நிலையில் ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறும்போது, “ இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் அசிங்கமான உண்மை, அவர்களது கட்சித் தலைவராலேயே அம்பலம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசை எதிர்த்துப் போராடுகிறார் என்பதை தெளிவாகச் சொன்னதற்காக ராகுல் காந்தியை நான் பாராட்டுகிறேன். ராகுல் காந்தி கூறிய அனைத்தும், நமது இந்தியாவை பிளவுபடுத்தி, நமது சமூகத்தைப் பிரிக்கும் வகையில் இருந்தன. பலவீனமான இந்தியாவை விரும்பும் அனைத்து சக்திகளையும் ஊக்குவிப்பதில் காங்கிரஸ் ஒரு தனி வரலாற்றைக் கொண்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 1 Comments )
  • பாலரத்னா

    தேர்தல் நேரத்தில் விசாரணை அமைப்புகள் எதிர்கட்சியினரை குறிவைத்து ரெய்டு நடத்துவதும் தேர்தலுக்கு பிறகு அந்த ரெய்டின் மேல் நடவடிக்கை என்ன என்பதை தெரியப்படுத்தாமல் இருப்பதும் விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தனது கட்டுக்குள் வைத்திருப்பதை நிரூபிக்கின்றது. பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும் இருந்த குறுகிய கால இடைவெளியில் லட்சக்கணக்கான வாக்காளர்களை மஹாராஷ்டிராவில் தேர்தல் ஆணையம் சேர்த்து, அந்த இடத்திலெல்லாம் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. அது பற்றிய கேள்விகளுக்கும் தேர்தல் ஆணையம் பதில் தர மறுக்கிறது. ஒரு சமூகஆர்வலர் தொடுத்த வழக்கில் அவர் கேட்ட ஆவணங்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதனைத்தர மறுத்து மத்திய அரசின் உதவியுடன் அவசர அவசரமாக தேர்தல் சட்டவிதிமுறைகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. அதற்கு உச்சநீதிமன்றம் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் நேர்மையாக சுதந்திரமாக இயங்கவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது ராகுல் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை என்பது உறுதியாகிறது.

 
x
News Hub
Icon