Published : 15 Jan 2025 06:47 PM
Last Updated : 15 Jan 2025 06:47 PM
கன்னவுரி: தங்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு அலட்சியப் போக்காக இருப்பதைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் ஜக்ஜித் சிங் தல்லேவாலுக்கு ஆதரவாக 111 விவசாயிகள் அடங்கிய குழு ஒன்று புதன்கிழமை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியது. தல்லேவாலின் உண்ணாவிரத போராட்டம் 51-வது நாளை எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.
பயிர்களுக்கும் சட்டபூர்வ குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் பஞ்சாப் - ஹரியானா எல்லையில் உள்ள கன்னவுரியில், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். அவர் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து மருத்துவ உதவிகளையும் ஏற்க மறுத்துவிட்டார். இதனால், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
டெல்லி நோக்கி பேரணி செல்வதற்கு போலீஸார் தடை விதித்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி முதல் சம்பு மற்றும் கன்னவுரி எல்லைகளில் எஸ்கேஎம் (அரசியல் சார்பற்றது) மற்றும் கிஷான் மஸ்தூர் மோர்ச்சா தலைமையின் கீழ் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, தல்லேவாலுடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றி வரும் விவசாய தலைவர் அபிமன்யு கோஹர், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளாததற்காக கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர்கள் கூறுகையில், "தல்லேவாலின் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் 51-வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு எதையும் கேட்கத் தயாராக இல்லை. மாறாக, கோரிக்கைகளை ஏற்காமல் பேச்சுவார்த்தையை தொடங்குகிறது. தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் தல்லேவாலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. அவரது உடல் தண்ணீரைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவர் தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் வாந்தியெடுப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விவசாயிகள் அனைவரும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளனர். அவர்களும் தல்லேவாலைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அமைதியான முறையில் சாகும் வரை உண்ணாவிரதம் முடிவெடுத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, தல்லேவாலுக்கு அசம்பாவிதம் நடந்தால், அதற்கு பின்பு ஏற்படும் விளைவுகளை மத்திய அரசால் சமாளிக்க முடியாது என்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவாசயிகள் தெரிவித்திருந்தனர். இதனிடையே, மத்திய விவசாயத் துறை இணையமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கேட்டபோது, உச்ச நீதிமன்றதின் உத்தரவுப்படி மத்திய அரசு செயல்படுவதாக தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி விவசாய சங்கத் தலைவர் தல்லேவாலை மருத்துவமனையில் சேர்க்கும் முடிவை எடுக்கும் பொறுப்பை பஞ்சாப் அரசிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்தது. அதேபோல் கன்னவுரியில் போராட்டம் நடைபெறும் இடத்திலிருந்து 700 மீட்டர் தொலைவில் உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு தல்லேவாலை மாற்றலாம் என்று தெரிவித்திருந்தது.
கனவுரி போராட்டக் களத்தில் மேம்படுத்தப்பட்ட உயிர் காக்கும் உபகரணங்கள் அடங்கிய இரண்டு ஆம்புலன்ஸ்களை மாநில அரசு நிறுத்திவைத்துள்ளது. 24 மணிநேரமும் மருத்துவக் குழு ஒன்றும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விவசாய சங்கத் தலைவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க பாட்டியாலாவின் ராஜிந்தரா மருத்துவக் கல்லூரி மற்றும் மாதா கவுசல்யா மருத்துவமனையின் மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்றை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல், போராட்டக் களத்துக்கு அருகே அவசர மருந்துகள் மற்றும் உபகரணங்கள் அடங்கிய தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எஸ்கேஎம் (அரசியல் சார்பற்றது), கிஷான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் எஸ்கேஎம் ஆகிய விவசாய அமைப்புகள் மத்திய அரசு தங்களின் கோரிக்கைகளை ஏற்க வைக்க கூட்டுப் போராட்டத்தை நடந்த பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (எஸ்கேஎம்) பஞ்சாப் ஹரியானா எல்லையில் கூட்டாக இணைந்து போராட்டம் நடத்தி வரும் மற்ற இரண்டு அமைப்புகளுடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment