Published : 15 Jan 2025 06:04 PM
Last Updated : 15 Jan 2025 06:04 PM
புதுடெல்லி: "பலவீனமான இந்தியாவை விரும்பும் சக்திகளை ஊக்குவித்த வரலாற்றை காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளது" என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக மட்டுமல்லாமல், இந்திய அரசுக்கு எதிராகவும் போராடுகின்றன என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று கூறி இருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு பாஜக கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளது. ராகுல் காந்தியின் கருத்துக்கு பதில் அளித்துள்ள ஜே.பி.நட்டா, “பலவீனமான இந்தியாவை விரும்பும் அனைத்து சக்திகளையும் ஊக்குவித்த ஒரு வரலாற்றை காங்கிரஸ் கொண்டுள்ளது. அவர்களின் அதிகார பேராசை, நாட்டின் ஒருமைப்பாட்டில் சமரசம் செய்தது, நம்பிய மக்களின் முதுகில் குத்தியது. ஆனால், இந்திய மக்கள் புத்திசாலிகள். ராகுல் காந்தியையும் அவரது அழுகிய சித்தாந்தத்தையும் எப்போதும் நிராகரிப்பதாக அவர்கள் முடிவு செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டள்ள எக்ஸ் பதிவில், "அரசியலமைப்பின் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்ற கட்சி, இப்போது, "நாங்கள் இப்போது பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாது இந்திய அரசையும் எதிர்த்துப் போராடுகிறோம்" என்று கூறுகிறது. அப்படியானால், ராகுல் காந்தி எதற்காக அரசியலமைப்பின் நகலை கையில் வைத்திருக்கிறார்?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, "ராகுல் காந்தியின் கருத்து ஒவ்வொரு குடிமகனையும் காயப்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர். இந்திய எதிர்க்கட்சித் தலைவரான அவர், நாம் இந்தியாவுக்கு எதிராகப் போராடுகிறோம் என்று கூறுகிறார்.
இந்தியாவுக்கு விசுவாசமான மற்றும் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் தேவை. ராகுல் காந்தியின் வார்த்தைகள், செயல்கள் மற்றும் நம்பிக்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை புண்படுத்துகின்றன. ராகுல் காந்தி இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது இது முதல் முறையல்ல. 'இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம்' என்று நீங்கள்(ராகுல் காந்தி) கூறி இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகம் திறப்பு விழாவில் பேசிய ராகுல் காந்தி, “நியாயமாக நடக்கும் போராட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது என்று நினைக்காதீர்கள். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் என்ற அரசியல் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அவர்கள் நம் நாட்டில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றியுள்ளனர். இப்போது நாங்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை மட்டுமல்ல, இந்திய அரசையும் எதிர்த்துப் போராடுகிறோம் என்று கூறி இருந்தார்.
மேலும், “1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தைப் பெறவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறி இருப்பது, ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல்; இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க முடியாது” என்று அவர் கூறியிருந்தார். முன்னதாக, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நிகழ்வு ஒன்றில் பேசும்போது, ‘1947-ல் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையவில்லை... அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டபோதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது’ என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > ‘மோகன் பாகவத் பேசியது தேசத் துரோகம்’ - ராகுல் காந்தி காட்டம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...