Published : 15 Jan 2025 04:45 PM
Last Updated : 15 Jan 2025 04:45 PM
புதுடெல்லி: 2024ல் நடந்த தேர்தல்களில் இந்தியா உட்பட பல நாடுகளில் ஆட்சியில் இருந்த கட்சிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் கருத்துக்கு அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைசசர் அஸ்வினி வைஷ்ணவிடம், மெட்டா இந்தியா-வின் துணைத் தலைவர் ஷிவ்நாத் துக்ரல் மன்னிப்பு கோரியுள்ளா். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அன்புள்ள அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 2024ல் நடந்த தேர்தல்களில் ஆட்சியில் இருந்த பல கட்சிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற மார்க் ஜுக்கர்பெர்க்-கின் கருத்து பல நாடுகளுக்கு உண்மையாக இருக்கிறது, ஆனால் இந்தியாவிற்கு அல்ல. இந்த கவனக்குறைவான தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம். மெட்டாவுக்கு இந்தியா நம்பமுடியாத அளவிற்கு முக்கியமான நாடாக உள்ளது. மேலும், அதன் புதுமையான எதிர்காலத்தின் மையத்தில் இருக்க நாங்கள் விரும்புகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோ ரோகன் பாட்காஸ்டில் பங்கேற்றுப் பேசிய மார்க் ஜுக்கர்பெர்க், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு 2024ம் ஆண்டு உலகின் பல பகுதிகளில் நடந்த தேர்தல்களில் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளில் ஆட்சியில் இருந்த கட்சிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என கூறி இருந்தார். அவரது இந்த கருத்துக்கு அஸ்வினி வைஷ்ணவ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட பதிவில், “கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு 2024-ல் நடந்த தேர்தல்களில் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளில் ஆட்சியில் இருந்த கட்சிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற ஜுக்கர்பெர்க்கின் கருத்து உண்மையில் தவறானது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, 2024 தேர்தலை 64 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களுடன் நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீதான நம்பிக்கையை இந்திய மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
80 கோடி மக்களுக்கு இலவச உணவு வழங்கியது, 220 கோடி இலவச தடுப்பூசிகள் வழங்கியது, கோவிட் காலத்தில் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு உதவி செய்தது முதல், இந்தியாவை வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக வழிநடத்துவது வரை, பிரதமர் மோடியின் தீர்க்கமான 3வது முறை வெற்றி நல்லாட்சி மற்றும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும். ஜுக்கர்பெர்க்கிடமிருந்து தவறான தகவல்களைப் பார்ப்பது ஏமாற்றமளிக்கிறது. உண்மைகளையும் நம்பகத்தன்மையையும் நிலைநிறுத்துவோம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோரப்படும் என தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரான பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்த தவறான தகவலுக்காக எனது குழு மெட்டாவை வரவழைக்கும். ஒரு ஜனநாயக நாட்டை பற்றிய தவறான தகவல் அதன் நற்பெயருக்கு களங்கத்தை விளைவிக்கும். இந்த தவறுக்காக இந்த அமைப்பு இந்திய நாடாளுமன்றத்திடமும் இங்குள்ள மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று வலியுறுத்தி இருந்தார்.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர், வாட்ஸ்அப் உள்ளிட்ட தகவல் தொடர்பு தளங்களின் தாய் நிறுவனமாக மெட்டா விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...