Published : 14 Jan 2025 06:07 AM
Last Updated : 14 Jan 2025 06:07 AM
புதுடெல்லி: பாதுகாப்பு படைகளின் போர்த் திறன் மற்றும் ஆயுதங்களின் கையிருப்பை ஊக்குவிக்கும் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் இந்தியா 4 முக்கிய மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: ஆயுதப் படைகளுக்கு தேவையான போர்க் கருவிகள் மற்றும் போர்த் திறனை அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து ரூ.63,000 கோடி மதிப்பில் 26 ரபேல் விமானங்களை நேரடியாக கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் தளத்தில் இருந்து இந்த ரபேல் விமானங்கள் இயக்கப்படும்.
இதேபோன்று பிரான்ஸுடன் மற்றொரு பெரிய ஒப்பந்தம் ரூ.38,000 கோடியில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி பிரான்ஸிடமிருந்து கூடுதலாக 3 ஸ்கார்பீன் டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கப்பட உள்ளது. மும்பையை சேர்ந்த மசகான் டாக்ஸில் இந்த கப்பல்கள் கட்டப்பட உள்ளன. இந்த மூன்று புதிய கப்பல்களையும் 2031-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ரபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்துக்கு, பாதுகாப்பு தொடர்பான பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குழு (சிசிஎஸ்) இம்மாத இறுதிக்குள் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஸ்கார்பீன் ஒப்பந்தத்துக்கும் விரைவில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.
பிரான்சில் பிப்ரவரி 11 மற்றும் 12 தேதிகளில் நடைபெறும் ஏஐ மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் இந்த ஒப்பந்தங்கள் முன்கூட்டியே கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் ரூ.53,000 கோடிக்கு 156 உள்நாட்டு பிரசாந்த் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் மற்றும் ரூ.8,500 கோடிக்கு 307 நவீன பீரங்கித் துப்பாக்கி அமைப்புகள் (ஏடிஏஜிஎஸ்) வாங்கும் வகையில் ஏனைய இரண்டு மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களும் இந்த நிதியாண்டின் அதாவது மார்ச் 31-ம் தேதிக்குள் கையெழுத்தாக உள்ளன. இவ்வாறு பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...