Published : 14 Jan 2025 03:05 AM
Last Updated : 14 Jan 2025 03:05 AM

பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கோலாகல தொடக்கம்: முதல் நாளிலேயே 1.50 கோடி பேர் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நேற்று தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணப்படும் மக்கள் கூட்டம். படம்: பிடிஐ

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் 1.50 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. உலகெங்கிலும் இருந்து 40 கோடிக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 26 வரை நடைபெறும் பிப்ரவரி 26-ம் தேதி வரை ஒன்றரை மாத காலம் இந்த விழா நடைபெற உள்ளது. கோடிக்கணக்கில் பக்தர்கள் குவிவதால், 4,000 ஹெக்டேர் பரப்பளவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1.60 லட்சம் கூடாரங்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த மெகா திருவிழாவுக்காக ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவால் உத்தர பிரதேச அரசின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய அளவில் ஊக்கம் கிடைக்கும் என்பது வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. மகா கும்பமேளா குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: 2025 மகா கும்பமேளா மிக முக்கி
யத்துவம் வாய்ந்தது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியா மற்றும் உத்தர பிரதேசத்தின் கலாச்சார, ஆன்மிக செழுமையை அனுபவிக்க இது ஓர் அரிய வாய்ப்பு.

கடந்த 2019-ல் பிரயாக்ராஜில் நடைபெற்ற அர்த்த கும்பமேளாவில் 24 கோடி பக்தர்கள் பங்கேற்றனர். இதன்மூலம் உ.பி. அரசுக்கு ரூ.1.20 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. தற்போது 40 கோடி பேர் வரும் நிலையில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், மகா கும்பமேளாவின் முதல் நாளான நேற்று கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 1.50 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.

தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்: பிரயாக்ராஜ் நகரில் லட்சக்கணக்கானோர் கூடுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினர் (என்டிஆர்எப்), மாநில போலீஸார், தீயணைப்பு படையினர் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பிரத்யேக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கங்கை நதியில் நீந்தியபடி செல்லும் நீரடி ட்ரோன்கள் உள்ளிட்டவை மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு உடல்நல அசவுகரியங்கள் ஏற்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிக்க கோபிகஞ்ச், உஞ்ச் உள்ளிட்ட இடங்களில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று காவல் துறை கண்காணிப்பாளர் அபிமன்யூ மங்லிக் தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் பயணம்: பிரயாக்ராஜ் நகரின் தனித்துவமான அழகையும், மகா கும்பமேளா நிகழ்வையும் வானில் இருந்து கண்டுகளிக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவையை உத்தர பிரதேச அரசு அறிமுகம் செய்துள்ளது. சுமார் 8 நிமிடங்கள் வரை வானில் வட்டமடித்தபடி மகா கும்பமேளாவை ரசித்து பார்வையிட ஒருவருக்கு ரூ.1,296 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்: மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர் ஒருவர் குறைந்தபட்சம் ரூ.5,000 செலவு செய்தால்கூட, 40 கோடி பேர் வரும்பட்சத்தில் உத்தர பிரதேச மாநில அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்பது பொருளாதார வல்லுநர்களின் மதிப்பீடாக உள்ளது. பக்தர்கள் செலவு செய்வது இன்னும் அதிகரித்தால், மாநிலத்தின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் 2 மடங்கு அதிகரித்து ரூ.4 லட்சம் கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது. இது மாநில ஜிடிபியை 1 சதவீதம் அளவுக்கு உயர்த்தும் எனதொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon