Published : 14 Jan 2025 02:48 AM
Last Updated : 14 Jan 2025 02:48 AM
புதுடெல்லி: அமெரிக்காவின் தாமஸ் மெர்ரிட் நால்ஸ் என்பவரின் மகனாகப் பிறந்தவர் வைஸானந்த் கிரி. தனது 15 வயதில் ஆதி சங்கராச்சாரியாரின் கொள்கைகளால் வைஸானந்த் ஈர்க்கப்பட்டார்.
பிறகு, நிரஞ்சனி அகாடாவின் வாராணசி மடத்தின் மகரிஷி மகேஷ் யோகியின் தொடர்பில் வந்தார். பின்னர் அவரது பெயர் வைஸானந்த் கிரி என மாற்றப்பட்டது. அதன்பின் இந்து மதக் கொள்கைகளை பின்பற்றி, யோகாகலை நிபுணரானார். கடந்த 2013-ல் பிரயாக்ராஜின் கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் இணைந்தவர் அதன் தலைவர் சுவாமி கைலாசானந்தா முன்னிலையில் வைஸானந்த் கிரி துறவறம் பூண்டார். இவருக்கு மகரிஷி பட்டமும் கிடைத்துள்ளது.
தற்போது, அமெரிக்காவின் அரிசோனாவில் யோகா பயிற்சி நிலையமும் நடத்தி வருகிறார். அத்துடன் சம்ஸ்கிருத மொழியையும் வளர்த்து வருகிறார். இவரிடம் யோகா கற்கும் அமெரிக்கர்கள் பலர் இந்து மதத்தால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பாவலும் அடங்குவார்.
வைஸானந்த்திடம் யோகா கற்ற லாரன் இந்து மதத்தை நேசிக்கத் தொடங்கி உள்ளார். பிரயாக்ராஜில் நேற்று தொடங்கிய மகா கும்பமேளாவுக்கு லாரன் பாவலுடன் அமெரிக்கர்கள் பலரும் வந்துள்ளனர். இந்த மகா கும்பமேளாவில் துறவி வைஸானந்த் கிரிக்கு, நிரஞ்சனி அகாடா சார்பில் மகா மண்டலேஷ்வர் பதவி நேற்று அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்து மதத்துக்காக செய்து வரும் பணியை அங்கீகரித்து இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளது.
கல்பவாசம்: இந்நிலையில், தனது குருவுடன் மகா கும்பமேளாவுக்கு வந்துள்ள லாரன் பாவல், கல்பவாசமும் செய்ய உள்ளார். அவருக்கு முன்கூட்டியே நிரஞ்சனி அகாடாவினர், கமலா என்ற பெயர் சூட்டியுள்ளனர். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் நிரஞ்சனி அகாடா துறவிகள் கூறுகையில், “கல்பவாசம் செய்த பின் இந்துவாக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இதன்மூலம், அவர்கள் இந்து மதத்தின் மீது ஈர்ப்புள்ளவர்களாகி விடுவர். தற்போது நிரஞ்சனி அகாடா மகா மண்டலேஷ்வர் கைலாஸானந்த் கிரியின் சீடராக லாரன் உள்ளார். இதன் அடுத்த நிலையில் லாரன் இந்து துறவியாக வாய்ப்புள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...