Published : 14 Jan 2025 02:38 AM
Last Updated : 14 Jan 2025 02:38 AM

வாக்குறுதிகளை நிச்சயமாக காப்பாற்றுவேன்: சோனமார்க் சுரங்கப் பாதையை திறந்து வைத்து பிரதமர் மோடி உறுதி

காஷ்மீரின் சோனமார்க் பகுதியில் புதிய சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அந்த சுரங்கப்பாதையில் அவர் முதல் பயணத்தை மேற்கொண்டார். படம்: பிடிஐ

காஷ்மீரின் சோனமார்க் பகுதியில் புதிய சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், “நான் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று உறுதி அளித்தார்.

காஷ்மீரில் இருந்து லடாக் எல்லைக்கு சோனமார்க் மலைப்பாதை வழியாக கடந்து செல்ல வேண்டும். பனிச்சரிவு, நிலச்சரிவு காரணமாக சோனமார்க் மலைப் பாதை பல மாதங்கள் மூடப்பட்டிருக்கும். எனவே குளிர், மழைக்காலங்களில் லடாக் எல்லையில் முகாமிட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு விமானங்கள் மூலம் ஆயுதங்கள், பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சோனமார்க் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கடந்த 2005-ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டு,

2012-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு சோனமார்க் சுரங்கப் பாதை பணிகள் வேகம் பெற்றன. ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தில் ரூ.2,700 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் சுரங்கப்பாதையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறைகளால் சுரங்கப்பாதை திறக்கப்படவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற்று உமர் அப்துல்லா புதிய முதல்வராக பதவியேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து சோனமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். இது ஸ்ரீநகர்- லே நகர் இடையிலான என்எச்-1 சாலையை இணைக்கிறது.

6.5 கி.மீ. நீளத்தில் 10 மீட்டர் அகலத்தில் இருவழிச் சாலையாக சுரங்கப்பாதை கட்டப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு சோனமார்க் மலைப்பகுதியை கடந்து செல்ல சுமார் 3 மணி நேரம் ஆகும். தற்போது சுரங்கப்பாதை வழியாக 20 நிமிடங்களில் சோனமார்க் பகுதியை கடந்து செல்ல முடியும். மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வாகனங்களை இயக்க முடியும். ஒரு மணி நேரத்தில் 1,000 வாகனங்கள் சுரங்கப்பாதையை கடந்து செல்ல முடியும்.

ராணுவ பயன்பாடு மட்டுமன்றி உள்ளூர் மக்களுக்கும் புதிய சுரங்கப்பாதை வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக காஷ்மீர், லடாக்கின் சுற்றுலா மேலும் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுரங்கப்பாதை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சோனமார்க் பகுதியில் சுரங்கப்பாதை விரைவில் திறக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தேன். எனது வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். நான் அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாகக் காப்பாற்றுவேன்.

மழைக்காலத்தில் நிலச்சரிவு, குளிர்காலத்தில் பனிச்சரிவால் சோனமார்க் மலைப்பாதையை பயன்படுத்த முடியாத சூழல் இருந்தது. புதிய சுரங்கப் பாதையால் சோனமார்க், கார்கில், லே பகுதி மக்களின் வாழ்க்கை எளிதாகும். குறிப்பாக சுற்றுலா தொழில் அபார வளர்ச்சி அடையும்.

கடும் குளிரில் தொழிலாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி சுரங்கப்பாதையை கட்டி முடித்துள்ளனர். இந்த கட்டுமான பணியின்போது கடந்த ஆண்டு அக்டோபரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிர்த் தியாகம் செய்தனர். அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கு நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் உழைத்து வருகின்றனர். பூமியின் சொர்க்கம் என்று காஷ்மீர் அழைக்கப்படுகிறது. இந்த சொர்க்க பூமியில் ஒரு காலத்தில் தீவிரவாத பிரச்சினை தலைதூக்கி இருந்தது. இப்போது நள்ளிரவில்கூட ஸ்ரீநகரில் எவ்வித அச்சமும் இன்றி ஐஸ்கிரீம் சாப்பிட முடிகிறது. பாரதத்தின் கிரீடமாக காஷ்மீர் விளங்குகிறது. இந்த கிரீடத்தை மேலும் அழகுபடுத்தி, வளப்படுத்த நான் உறுதி பூண்டிருக்கிறேன். காஷ்மீரின் செனாப் பாலத்தை பார்த்து ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்துள்ளது. காஷ்மீர் முழுவதும் சுமார் ரூ.42,000 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் முதல்வர் உமர் அப்துல்லாவும் கலந்து கொண்டார். சுமார் 40 ஆண்டுகளுக்குபிறகு காஷ்மீரில் சர்வதேச கிரிக்கெட் போட்டி அண்மையில் நடத்தப்பட்டது. 21-ம் நூற்றாண்டில் ஜம்மு காஷ்மீரில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது.

நான் பாஜக தொண்டனாக இருந்தபோது அடிக்கடி காஷ்மீருக்கு வந்துள்ளேன். அந்த நாட்களை இப்போது நினைவுகூர்கிறேன்.

நாடு முழுவதும் பொங்கல், மகர சங்கராந்தி, உத்தராயணம், லோகிரி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த பண்டிகைகளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

விழாவில் பங்கேற்ற காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாவது: காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. அமைதியாக, நேர்மையாக தேர்தல் நடைபெற்றது. இந்த பெருமை அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். தேர்தலை திறம்பட நடத்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று நீங்கள் (பிரதமர் மோடி) உறுதி அளித்து உள்ளீர்கள். அந்த வாக்குறுதியை விரைந்து நிறைவேற்ற வேண்டுகிறேன்.

இவ்வாறு உமர் அப்துல்லா பேசினார்.

ஒரே ஹெலிகாப்டரில் பயணம் செய்த காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர்: சோனமார்க் சுரங்கப்பாதை திறப்பு விழாவில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் பங்கேற்றனர். இருவரும் ஒரே ஹெலிகாப்டரில் ஸ்ரீநகரில் இருந்து சோனமார்க் பகுதிக்கு சென்றனர். இந்த புகைப்படத்தை அமைச்சர் ஜிதேந்திர சிங் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த செப்டம்பர், அக்டோபரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது காஷ்மீரின் ஜம்மு பகுதியை சேர்ந்த ஜிதேந்திர சிங்கும் தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவர் உமர் அப்துல்லாவும் பரஸ்பரம் கடுமையாக விமர்சித்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காஷ்மீர் முதல்வராக பதவியேற்ற உமர் அப்துல்லா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். இதற்கு சான்றாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் முதல்வர் உமர் ஒரே ஹெலிகாப்டரில் பயணம் செய்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x