Published : 12 Jan 2025 12:19 PM
Last Updated : 12 Jan 2025 12:19 PM
புதுடெல்லி: சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். இளைஞர்களுக்கு ஒரு நித்திய உத்வேகமாக, இளம் மனங்களில் அவர் தொடர்ந்து ஆர்வத்தையும் லட்சியத்தையும் தூண்டி வருகிறார். வலுவான மற்றும் வளர்ந்த இந்தியா என்ற அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், "சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலிகள். அநாட்டு மக்கள் அனைவருக்கும் 'தேசிய இளைஞர் தின' நல்வாழ்த்துக்கள். நாட்டு மக்களுக்கு அவர்களின் சொந்த கலாச்சாரத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், வேதாந்தம் மற்றும் யோகா சார்ந்த தத்துவத்தால் உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர். ராமகிருஷ்ணா மிஷன் மூலம், 'மனிதனுக்குச் செய்யும் சேவை கடவுளுக்குச் செய்யும் சேவை' என்பதாக இரண்டையும் ஒன்றிணைத்தார். இளைஞர்களிடம் குணநலன் மற்றும் சுயமரியாதை விதைகளை விதைத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஊக்கப்படுத்திய சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையும் தத்துவம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாகும்" என கூறியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள தேசிய இளைஞர் தின வாழ்த்துச் செய்தியில், "பாரதம் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளுக்கும் பயணப்பட்டு, தன்னுடைய சொற்பொழிவுகள் மூலம், இளைய சமுதாயத்தின் உத்வேகத்தை அதிகரிக்கச் செய்த “கர்மயோகி”.
நமது கலாச்சாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்படுவதற்கு “ஆன்மீகமே” ஆதி ஊற்று என்பதை ஆணித்தரமாய் எடுத்துரைத்த “சுவாமி விவேகானந்தர்” அவர்களின் பிறந்தநாள் இன்று. பாரதம், “தேசிய இளைஞர்கள் தினமாக” ஏற்றுக்கொண்ட இந்த நன்னாளில், அவர் நமக்கு அளித்த பொன்மொழிகள் வழி, தேசத்தை வலிமைப்படுத்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில், "தன்னுடைய ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் தேசபக்தி உரைகள் மூலம் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களைச் சிறந்த சிந்தனையாளர்களாகவும், தலைவர்களாகவும் உருவாக்கிய வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று.
பாரதத்தின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை, உலக அரங்கிற்குக் கொண்டு சென்றவர். ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஆன்மீக வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாக வெளிச்சம் தந்தவர்.
இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை விதைத்த அவரது பிறந்த தினமான இன்று, தேசிய இளைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டிற்காகவும், எளிய மக்கள் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, பக்தி மற்றும் சேவையின் அடையாளமாக விளங்கும், சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றி வணங்குகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில், "இந்தியாவின் தலைசிறந்த ஆளுமைகளில் ஒருவரும், நாட்டு மக்களின் பரிபூரண விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த வீரத் துறவியுமான சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த தினம் இன்று. மன உறுதிக்கு முன் மலையும் நொறுங்கிவிடும் என்ற தீர்மானத்துடன் உழைத்தால் எவ்வித இலக்கையும் எளிதாக எட்டிப்பிடிக்க முடியும் எனக்கூறி இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்ந்த விவேகானந்தர் அவர்களின் உயரிய எண்ணங்களை பின்பற்றிட இந்நாளில் உறுதியேற்போம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment