Published : 11 Jan 2025 12:42 PM
Last Updated : 11 Jan 2025 12:42 PM
புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் பிராணபிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அயோத்தியில் குழந்தை ராமரின் பிராணப் பிரதிஷ்டையின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பல நூற்றாண்டு கால தியாகம், தவம் மற்றும் போராட்டத்தின் மூலம் கட்டப்பட்ட இந்தக் கோயில், நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் ஒரு சிறந்த பாரம்பரியமாகும். வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தை அடைவதற்கு இந்த தெய்வீக மற்றும் பிரமாண்டமான ராமர் கோயில் ஒரு சிறந்த உத்வேகமாக மாறும் என்று நான் நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஜெய் ஸ்ரீ ராம்! அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டையின் முதலாமாண்டு விழாவை முன்னிட்டு அனைத்து ராம பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை மனிதநேயம் மற்றும் ஒழுக்கத்திற்கு ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டு. 500 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, கடந்த ஆண்டு பிரதமர் மோடி அயோத்தியில் பகவான் ஸ்ரீ குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டையை நிகழ்த்தி, நாடு முழுவதும் ஆன்மீக உணர்வின் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த பிரமாண்டமான கோயில் பல நூற்றாண்டுகளாக நாட்டு மக்களின் நம்பிக்கை மற்றும் அபிலாஷைகளின் அடையாளமாக இருக்கும்.
ஸ்ரீ ராம ஜென்மபூமி இயக்கத்திற்கு பங்களித்த அனைத்து சிறந்த மனிதர்களையும் நான் நினைவு கூர்ந்து அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் மோடி அரசு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும்" என தெரிவித்துள்ளார்.
பாஜக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில், எண்ணற்ற ராம பக்தர்களின் பல நூற்றாண்டு கால தியாகம், தவம் மற்றும் போராட்டத்தின் சின்னமாகும். இது நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் ஒரு சிறந்த பாரம்பரியமாகும். அயோத்தியில் பகவான் ஸ்ரீ குழந்தை ராமரின் பிராணப் பிரதிஷ்டையின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டை முன்னிட்டு, ராமர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று முதல் 3 நாட்களுக்கு யாகங்கள் உள்பட சிறப்பு வழிபாடுகள் நடக்கும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யஜுர்வேத பாராயணம் தொடங்கியுள்ளது. கோயில் வளாகத்தில் ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மூன்று நாட்களுக்கும் கோயில் வளாகத்தில் ராம கதை சொற்பொழிவுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்துள்ளார்கள். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஏராளமான பஜனை குழுக்கள், அயோத்தி நகர வீதிகளில் கீர்த்தனைகளை பாடியபடி ஊர்வலமாக வந்தனர்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், குழந்தை ராமருக்கு 'அபிஷேகம்' செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதியம் 12.20 மணியளவில் பிரமாண்டமான ஆரத்தி நடைபெறும். அப்போது, 56 வகையான பிரசாதங்கள் குழந்தை ராமருக்கு படைக்கப்படும்.
மூன்று நாள் சிறப்பு நிகழ்ச்சிகளை முன்னிட்டு பொது மக்களுக்கும், 110 விஐபிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. "ஜனவரி 22, 2024 அன்று நடைபெற்ற பிராண பிரதிஷ்டை விழாவைத் தவறவிட்ட 110 விஐபிக்கள் உட்பட விருந்தினர்களுக்கு அழைப்பிதழ் கடிதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கலந்து கொள்ள முடியாதவர்கள் இந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்வார்கள்" என்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள துறவிகள் மற்றும் பக்தர்களுக்கு அறக்கட்டளை ஏற்கனவே அழைப்புகளை அனுப்பியுள்ளது, மேலும் மூன்று நாள் திருவிழாவின் போது குறைந்தபட்சம் ஒரு நாள் வருகை தந்து அயோத்தியின் ஆன்மீக சூழ்நிலையை அனுபவிக்குமாறு பக்தர்களை சம்பத் ராய் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆண்டு விழாவைக் காண கோயிலுக்கு வந்த உள்ளூர்வாசியான அனுப் மிஸ்ரா, "ஜனவரி 2024ல் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டபோது எங்களால் ராமரை தரிசிக்க முடியவில்லை. ஆனால் இந்த முறை முதல் ஆண்டு விழாவில் குழந்தை ராமரை தரிசிக்கும் அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்துள்ளது" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...