Published : 10 Jan 2025 02:03 AM
Last Updated : 10 Jan 2025 02:03 AM
உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி தேசத்தந்தை மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார். இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கடந்த 2003-ம் ஆண்டு முதல்முறையாக வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு தினத்தையொட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் கடந்த 8-ம் தேதி பிரம்மாண்ட மாநாடு தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உட்பட 70 நாடுகளை சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர் பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: மாமன்னர் அசோகர் போரை தவிர்த்து அமைதி பாதையை தேர்ந்தெடுத்தார். இந்த நேரத்தில் உலகத்துக்கு இந்தியா சில அறிவுரைகளை வழங்குகிறது. உலக நாடுகள் யுத்தத்தை தவிர்த்து, புத்தரின் போதனைகளைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் உலகத்தின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து உள்ளேன். ஒவ்வொரு தலைவரும் தங்கள் நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினரின் அருமை, பெருமைகள் குறித்து பெருமிதமாக பேசினர். பன்முகத்தன்மையின் பிறப்பிடமாக, உலக ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது. எந்தவொரு நாட்டுக்கு இந்தியர்கள் சென்றாலும் அந்த நாட்டின் கலாச்சாரத்தை ஏற்று வாழ்கின்றனர். அதோடு இந்திய கலாச்சாரத்தையும் பரப்புகின்றனர்.
21-ம் நூற்றாண்டில் இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. இப்போது 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. விரைவில் 3-வது இடத்தை எட்டிப் பிடிப்போம்.
நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றிருக்கிறோம். எரிசக்தி, விமான போக்குவரத்து, மின்சார வாகனங்கள், மெட்ரோ ரயில், புல்லட் ரயில் என அனைத்து துறைகளிலும் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் தற்போது உள்நாட்டிலேயே போர் விமானங்கள், பயணிகள் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்தபோது ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் சேர்க்கப்பட்டது. சர்வதேச அளவில் தெற்காசிய நாடுகளின் குரலாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. உலகின் பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பதவி வகிக்கின்றனர். இந்திய இளைஞர்களின் திறமையை, உலகம் வியந்து பார்க்கிறது.
ஜி20 உச்சி மாநாட்டின்போது இந்தியாவின் பன்முகத்தன்மையை பார்த்து உலக தலைவர்கள் வியந்தனர். இந்தியாவின் கலாச்சாரத்தை போற்றும் வகையில் காசி- தமிழ்ச் சங்கமம், காசி- தெலுங்கு சங்கமம், சவுராஷ்டிரா- தமிழ்ச் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
விரைவில் திருவள்ளுவர் தினத்தை கொண்டாட உள்ளோம். பொதுமறையான திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் அமைக்கப்படும். முதல்கட்டமாக சிங்கப்பூரில் திருவள்ளூவர் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் தமிழ் மொழியின் பெருமை மற்றும் தமிழ் கலாச்சாரத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் விரைவில் மகா கும்பமேளா தொடங்க உள்ளது. இந்த விழாவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன். வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த இலக்கை எட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ராமாயணம், வளர்ச்சி அடைந்த இந்தியா, குஜராத்தில் இருந்து ஓமனில் குடியேறிய இந்தியர்கள் மற்றும் ஒடிசாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் 4 கண்காட்சிகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
ஒடிசாவின் விருந்தோம்பலுக்கு நன்றி: ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெறும் வெளிநாடுவாழ் இந்தியர் மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து இந்திய வம்சாவளியினர் பங்கேற்று உள்ளனர்.
அவர்களில் ஸ்லோவேனியாவில் வசிக்கும் கோகி வெப்பர் கூறும்போது, “இந்தியாவின் மாணிக்கமாக ஒடிசா விளங்குகிறது. முதல்முறையாக ஒடிசாவுக்கு வருகிறேன். இந்த மாநில மக்களின் விருந்தோம்பல் மிகச் சிறப்பாக உள்ளது" என்று தெரிவித்தார்.
கனடாவை சேர்ந்த புனித் மன்சந்திரா கூறும்போது, “இந்திய வெளியுறவுத் துறை வெகுச் சிறப்பாக மாநாட்டை நடத்துகிறது. ஒடிசா அரசு மற்றும் மாநில மக்களின் விருந்தோம்பல், அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இந்திய வம்சாவளியினரும் ஒடிசாவின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT