Published : 09 Jan 2025 07:54 PM
Last Updated : 09 Jan 2025 07:54 PM
முங்கேலி: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் உள்ள எஃகு ஆலையில், சிலோ (Silo) அமைப்பு இடிந்து விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து முங்கேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போஜ்ராம் படேல் கூறுகையில், "முங்கேலி மாவட்டத்தின் சரகான் பகுதியில் உள்ள எஃகு உருக்கு ஆலையில் வியாழக்கிழமை பிற்பகல் இந்த விபத்து நடந்துள்ளது. பழைய பொருள்களை போட்டு வைக்கப் பயன்படும் களஞ்சியம் போன்ற உயரமான இரும்பாலான சிலோ இடிந்து அங்கிருந்தவர்கள் மீது விழுந்துள்ளது. அதில் சிலர் சிக்கியிருக்கலாம் என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது.
கிட்டத்தட்ட அனைத்து துறைகளின் பணியாளர்களும் இங்கு உள்ளனர். ஒரு சிலர் மட்டும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம். இடிபாடுகளை அகற்றிய பின்பு நிலவரம் குறித்து தெரிய வரும். விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்லனர். மீட்பு பணிகள் நடந்து வருகின்றன" என்றார்.
முங்கேலி மாவட்ட ஆட்சியர் ராகுல் தியோ கூறுகையில், "மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. மாநில பேரிடர் மீட்பு படையினர் இங்கு உள்ளனர். எங்களிடம் போதிய ஆட்களும், தேவையான உபகரணங்களும் உள்ளன. சில தொழிலாளர்களைக் காணவில்லை. அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆலை மேலாளர் மூலமாக விவரங்களை கேட்டறிந்து வருகிறோம். விரைவில் அனைத்து விவரங்களும் தெரியவரும்" என்றார்.
இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை தெளிவாக தெரியவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT