Published : 09 Jan 2025 03:34 PM
Last Updated : 09 Jan 2025 03:34 PM
புதுடெல்லி: ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்று வரும் 18-வது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில், ராமாயணம் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ‘விஷ்வரூப் ராம்: தி யுனிவர்சல் லெகசி ஆஃப் ராமாயணா’ எனும் பெயரில் உள்ள அதில் ராவணன் இசைக்கருவி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்த வருடம் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் 18-வது பிரவாசி பாரதிய திவஸ் நடைபெற்று வருகிறது. ஜனவரி 8 - 12 வரையில் நடைபெறும் இதில், ‘விஸ்வரூப் ராம்: தி யுனிவர்சல் லெகசி ஆஃப் ராமாயணம்’ எனும் கண்காட்சியும் நடைபெறுகிறது. வெளியுறத் துறை அமைச்சகம் சார்பிலான இக்கண்காட்சியில், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக ராமாயணம் காண்பிக்கப்படுகிறது. இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அவர்களுக்கு நினைவூட்டுவதே இந்தக் கண்காட்சியின் நோக்கம் என வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
ராமர் மற்றும் ராமாயணத்தின் பிறப்பிடம் இந்தியாவாக இருந்தாலும் இன்று உலகம் முழுவதையும் அது சென்றடைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்பும், ராமாயணம் இன்றும் உலகம் முழுவதும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. அது கதையின் உள்ளூர் பதிப்புகளாகவும், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியாகவும் கொண்டாடப்படுகிறது.
அந்த நாடுகளின் திருவிழாக்கள், கட்டிடக்கலை, இலக்கியம், நடனம், நாடகம், இசை, நாட்டுப்புறவியல் மற்றும் கைவினைப்பொருட்கள் போன்ற உள்ளூர் கலை வடிவங்களிலும் ராமாயணத்தின் தாக்கம் உள்ளது. அந்நாடுகளின் தபால் தலைகள் மற்றும் நாணயங்களில் கூட ராமாயணம் காணப்படுகிறது!
இன்றைய காமிக்ஸ் புத்தகம், திரைப்பட ஹீரோக்கள் மற்றும் பண்டைய புராண ஹீரோக்கள், ராமர் தனது வாழ்க்கையில் காட்டிய அதே மதிப்புகளை பிரதிபலிக்கிறார்கள். இதுபோன்ற நிலையை, விஸ்வரூப் ராம் என்ற கண்காட்சி, ராமாயணம் உலகளவில் கலை, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
இதில், அதன் கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட நாடுகளின் வெவ்வேறு கலைப்பொருட்களைக் காட்டுகிறது. இக்கண்காட்சியில் சுமார் 150 பொருட்கள் காட்சிக்கு உள்ளன. ஓவியம், பொம்மைகள், முகமூடிகள், மல்டிமீடியா உள்ளிட்ட 66 இந்தியக் காட்சிப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் ஐசிசிஆர் நிறுவனத்தால் வாங்கப்பட்ட, ராவண்ஹத்தா எனும் ராவணால் இசைக்கப்படும் இசைக் கருவியும் காட்சிக்கு உள்ளது.
17 வெளிநாடுகளில் இருந்து 80 வெளிநாட்டு கலைப்பொருட்களும் இதில் உள்ளன. 16 வகை ராமாயண முகமூடிகள், 4 அஞ்சல் அட்டைகள், தாய்லாந்தில் இருந்து ஒரு சுவரொட்டி மற்றும் ஒரு ஓவியப் பட்டியல் இடம் பெற்றுள்ளன. மெக்ஸிகோவிலிருந்து ராவணனின் உண்மையான உருவ அளவைப் போலவே உருவாக்கப்பட்டுள்ள உருவம், இந்தோனேசியாவிலிருந்து ராமாயண பொம்மைகள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற்று உள்ளன.
நேபாளம், கனடா மற்றும் நியூசிலாந்தில் இருந்து 19 தபால் முத்திரைகள், ஃபிஜியில் இருந்து ராமர் மற்றும் ஹனுமான் சிலைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பாரசீகம் எனும் ஈரான், அரபுநாடான குவைத், ரஷ்யா, சீனா மற்றும் மங்கோலியாவிலிருந்து அந்நாட்டு மொழிகளில் ராமாயண நூல்களும் உள்ளன.
கம்போடியாவிலிருந்து முகமூடி மற்றும் பொம்மைகள், சிங்கப்பூரின் நிழல் பொம்மைகள், டிரினிடாட் & டொபாகோவிலிருந்து ராவணன் தலைக்கவசம், மலேசியாவிலிருந்து புத்தகங்கள் மற்றும் நிழல் பொம்மைகள் ஆகியன உள்ளன.
ஒரு பெரிய 25 X 11 அடி அளவிலான எல்இடி திரையில், உலகின் 22 நாடுகள் ராமாயணத்துடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதை விளக்கப்படுகிறது.
முதல்முறையாக நடைபெறும் இதுபோன்ற இதிகாசங்களுக்கான கண்காட்சி, வெளிநாடுவாழ் இந்தியர்களைக் கவர்ந்து வருகிறது. ஜனவரி 8 இல் துவங்கிய இக்கண்காட்சி வரும் ஜனவரி 12 வரையில் புவனேஸ்வரில் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT