Published : 09 Jan 2025 02:22 AM
Last Updated : 09 Jan 2025 02:22 AM

இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்ட வி.நாராயணன் யார்?

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரோவின் தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்துள்ளது. இதையடுத்து, வி.நாராயணன் பொங்கல் பண்டிகை தினமான ஜன. 14-ம் தேதி பொறுப்பேற்கிறார். அவர், கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநராக பணியாற்றியுள்ளார். கரக்பூர் ஐஐடி-யில் பட்டம் பெற்ற இவர், 1984-ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார்.

இந்திய விண்வெளித் துறையில் 40 ஆண்டு அனுபவமுள்ள ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாக இருக்கிறார். ராக்கெட் மற்றும் விண்கல திரவ உந்து விசையில் நிபுணத்துவம் பெற்றவர். தொடக்க காலத்தில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஒலி ராக்கெட்டுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவுதளம் மற்றும் துருவ செயற்கைக்கோள் ஏவுதளம் ஆகியவற்றின் திட உந்துவிசை பகுதியில் பணியாற்றினார். இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, சூரிய ஆய்வுக்கான ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி மாக்-3 வகை ஏவுகணைக்கான ‘சிஇ20 கிரையோஜெனிக்’ இன்ஜின் தயாரிப்பு, சந்திரயான் 2 மற்றும் 3 உள்ளிட்ட பல திட்டங்
களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x