Published : 09 Jan 2025 01:49 AM
Last Updated : 09 Jan 2025 01:49 AM
இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அத்துடன் லிபரல் கட்சி தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் தலைமைகள் அடிக்கடி மாறியபோதும், நிலையான மற்றும் வலிமையான பிரதமராக நரேந்திர மோடி நீடித்து வருவதாக பாஜக எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியை அல்டிமேட் பிக்பாஸ் என்று சித்தரிக்கும் ஒரு விளக்கப்படத்தை எக்ஸ் வலைதளத்தில் பாஜக பகிர்ந்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகின் வல்லரசு நாடாக கருதப்படும் இங்கிலாந்தில் கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து இதுவரை டேவிட் கேமரூன், தெரஸா மே, போரிஸ் ஜான்ஸன்,லிஸ் டிரஸ் , ரிஷி சுனக் என 5 பிரமதர்கள் மாறியுள்ளனர். தற்போது கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக உள்ளார். அதேபோன்று ஆஸ்திரேலியா இந்த காலகட்டத்தில் டோனி அபாட், மால்கம் டர்ன்புல், ஸ்காட் மாரிஸன் என 3 பிரதமர்கள் மாற்றத்தை கண்டுள்ளது. தற்போது ஆண்டனி அல்பனீஸ் பிரதமர் பொறுப்பு வகிக்கிறார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் கடந்த பத்தாண்டுகளில் பராக் ஒபாமா, டிரம்ப், ஜோ பைடன் என மூன்று பிரதமர்கள் மாறியுள்ளனர். ஜப்பானில் ஷின்ஷோ அபே, யாஷிகிடே சுகா, புமியோ கிஷ்கிதா என 3 பிரதமர்கள் மாற்றம் கண்டு தற்போது அந்தப் பொறுப்பை ஷிகெரு இஷிபா வகித்து வருகிறார். இதுதவிர,கனடாவும் ஸ்டீபன் ஹார்பர், ஜஸ்டின் ட்ரூடோ என 2 பிரதமர்கள் மாற்றத்தை சந்தித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் பொருளாதார பலம் வாய்ந்த பல முக்கிய நாடுகளின் பிரதமர்கள் பலமுறை மாறியபோதும் இந்தியாவில் இன்னும் நிலையான மற்றும் வலிமையான பிரதமராக நரேந்திரமோடி திகழ்கிறார். "அல்டிமேட் பிக்பாஸ் எனர்ஜி" பிரதமர் நரேந்திர மோடி என பாஜக அந்த பதிவில் புகழாரம் சூட்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT