Published : 08 Jan 2025 02:20 PM
Last Updated : 08 Jan 2025 02:20 PM

டெல்லி முதல்வர் பங்களாவுக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மி அமைச்சர், எம்.பி. தடுத்து நிறுத்தம்

புதுடெல்லி: டெல்லியின் முதல்வருக்கான பங்களாவான 6, ஃப்ளாக்ஸ்டாஃப் சாலை இல்லத்துக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மற்றும் அக்கட்சி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்னதாக, டெல்லி முதல்வர் வீட்டில் தங்க முலாம் பூசப்பட்ட கழிப்பறை, நீச்சல் குளம், மினி பார் உள்ளதாக கூறும் பாஜகவின் குற்றச்சாட்டை அவர்கள் ஆய்வு செய்வார்கள் என்ற கட்சியின் அறிவிப்பைத் தொடர்ந்து அவர்கள் பங்களாவுக்குள் நுழைய முயன்றனர்.

ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் டெல்லியின் முதல்வராக இருந்தபோது அவரது அதிகாரபூர்வ இல்லமாக இருந்த அந்த பங்களாவினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் சவுரப் பரத்வாஜ், எம்.பி. சஞ்சய் சிங் இருவரும் பங்களாவுக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர். அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது 6 ஃப்ளாக்ஸ்டாஃப் சாலை பங்களா, பல கோடி ரூபாய் செலவில் மிகவும் ஆரம்பரமான வகையில் புதுப்பிக்ப்பட்டது. அப்போது அது ஷீஷ் மஹாலாக மாற்றப்பட்டது என்று பாஜகவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்த பங்களா பெரும் கவனம் பெற்றது.

அந்த பங்களாவில் தங்க முலாம் பூசப்பட்ட கழிப்பறை, நீச்சல் குளம் இருப்பதாக பாஜக தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் ஊடகத்தினருக்கு பங்களாவுக்குள் நுழைந்து பாஜகவின் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை உறுதி செய்வார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது. அதன்படி பங்களாவுக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து எம்.பி., சஞ்சய் சிங் கூறுகையில், “பாஜகவின் பொய்ப் பிரச்சாரங்கள் இன்று அம்பலமாகியுள்ளது. முதல்வரின் இல்லத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கழிப்பறை, நீச்சல் குளம், மினி பார் இருப்பதாக பாஜக தலைவர்கள் ஒரு மாத காலமாக கூச்சலிட்டு வருகின்றனர். இன்று நான் உங்களை (ஊடகத்தினர்) அழைத்துக்கொண்டு இங்கு வந்தேன். ஆனால் அவர்கள் (பாஜக) தண்ணீர் பீச்சும் இயந்திரம், போலீஸாரை வைத்து தடுத்து நிறுத்துகிறார்கள். நாங்கள் தீவிரவாதிகளா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "முதல்வர் இல்லத்துக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்ததாக பொதுப் பணித்துறை மற்றும் போலீஸார் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் பாஜகவினர் முதல்வர் இல்லத்தின் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டது. இப்போது நாங்கள் ஊடகத்தை அழைத்துக்கொண்டு பங்களாவுக்குள் செல்ல முயன்றால் தடுத்து நிறுத்துகிறார்கள்.

எங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள் எங்களை உள்ளே செல்ல அனுமதித்தால், உண்மை வெளிப்பட்டு விடும். தங்க முலாம் கழிப்பறை, நீச்சல் குளத்தை நாங்களும் பார்க்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

டெல்லி முதல்வர் வீடு குறித்த பாஜகவின் குற்றசாட்டை ஊடகங்களை அங்கு அழைத்து சென்று காட்டுவது என்ற நிலைப்பாட்டுடன் எதிர்கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, பிரதமரின் இல்லத்தையும் பொது ஆய்வுக்காக பாஜக திறந்து விட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பிரதமரின் இல்லத்தை ராஜ் மஹால் என்று அழைக்கும் ஆம் ஆத்மி கட்சி, அது ரூ.2700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x