Published : 08 Jan 2025 06:17 AM
Last Updated : 08 Jan 2025 06:17 AM
புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறை செயலராகவும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்.வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜனவரி 14 ஆம் தேதி முறைப்படி பதவியேற்றுக் கொள்கிறார். இஸ்ரோவின் 11-வது தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை வி.நாராயணன் இஸ்ரோ தலைவராக செயல்படுவார் என மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ( ACC ) அறிவித்துள்ளது. நியமனக் குழு என்பது மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கியப் பதவிகளுக்கு மூத்த அதிகாரிகளை நியமிப்பதற்குப் பொறுப்பான இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு ஆகும்.
வி.நாராயணன் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இஸ்ரோவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த வி.நாராயணன் இதுவரை ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது இவர் திருவனந்தபுரத்தில் உள்ள எல்பிஎஸ்சி.,யின் (LPSC) இயக்குநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வரும் 14 ஆம் தேதி முதல் அவர் இஸ்ரோ தலைவராகிறார்.
இஸ்ரோ ககன்யான், சந்திரயான்-4 திட்டங்களில் கவனம் செலுத்திவரும் நிலையில் அவற்றில் வி.நாராயணன் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT