Published : 07 Jan 2025 07:32 PM
Last Updated : 07 Jan 2025 07:32 PM
புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் இன்றைய அறிவிப்பில் அயோத்தியின் மில்கிபூர் இடைத்தேர்தலும் இடம்பெற்றுள்ளது. இதில் மீண்டும் பாஜக - சமாஜ்வாதி கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், உ.பி.யில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதன் 80 தொகுதிகளில் 62 வைத்திருந்த பாஜக இந்த முறை 33 மட்டும் பெற்றிருந்தது. இதில் குறிப்பாக ராமர் கோயிலின் அயோத்தி அடங்கிய பைஸபாத் தொகுதியில் பாஜகவுக்கு, சமாஜ்வாதியிடம் தோல்வி கிடைத்தது. மில்கிபூரின் சமாஜ்வாதி எம்எல்ஏவான அவ்தேஷ் பிரசாத், பைஸாபாத்தின் எம்பியானார்.
ராமர் கோயில் கட்டப்பட்ட பின் நடைபெற்ற முதல் தேர்தலாக மக்களவைத் தேர்தல் இருந்தது. இந்த தோல்வியால் பாஜக ஆளும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் யோகி, பாஜகவினரின் அதீத நம்பிக்கையே தோல்விக்கான காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார். கடந்த அக்டோபரில் உ.பியின் 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதோடு சேர்த்து மில்கிபூருக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. இதன் மீதும் பாஜகவை எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.
தேர்தல் நடைபெறாமைக்கு மில்கிபூர் மீதான நீதிமன்ற வழக்கு காரணமாகக் கூறப்பட்டது. இதனால், தள்ளிப்போன மில்கிபூரின் இடைத்தேர்தல், பிப்ரவரி 5-ல் நடைபெறுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மில்கிபூரின் இந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாதியை வெல்ல வேண்டியக் கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு முன்பாக முதல்வர் யோகி பலமுறை மில்கிபூருக்கு நேரில் வந்து சென்றார்.
இதற்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், “முதல்வர் யோகி எத்தனை முறை வந்தாலும் மில்கிபூரை எங்களிடமிருந்து பறிக்க முடியாது” எனவும் தெரிவித்திருந்தார். எனினும், 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வெறும் 2-ல் வெற்றி பெற்று பின்னடைவை சந்தித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT