Last Updated : 11 Jul, 2018 07:37 AM

 

Published : 11 Jul 2018 07:37 AM
Last Updated : 11 Jul 2018 07:37 AM

ரகசிய தகவலை வைத்திருந்ததாக விமானப் படை முன்னாள் ஊழியர் கைது

ரகசியத் தகவலை வைத்திருந்ததாக இந்திய விமானப் படையின் முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

பிஹார் மாநிலம் பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகாந்த் ஜா. இவர் இந்திய விமானப் படையின் ஏர்போர்ஸ் ஆபீஸர் மெஸ்ஸில் சமையல்காரராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் விமானப் படையிலிருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.

இதனிடையே கடந்த 5-ம் தேதி இவரை, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இந்திய விமானப் படை அதிகாரிகள் கைது செய்தனர். விமானப் படையின் போர் விமானங்கள் கிளம்பும் நேரப் பட்டியல், ரகசியத் தகவல்கள், ரகசிய ஆவணங்களை சசிகாந்த் வைத்திருந்த குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார் என்று கோரக்பூர் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி பிரவீண் குமார் சிங் தெரிவித்தார்.

அவரிடமிருந்து ரகசிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் கோரக்பூரிலுள்ள இந்திய விமானப் படைத் தளத்தின் வரைபடமும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

சமையல்காரராக அவர் பணியாற்றி வந்தபோது விமானப் படை அதிகாரிகளின் டிரைவராகவும் அவர் பணியாற்றி வந்த விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. அவர்களுடன் காரில் செல்லும்போது விமானப் படை உயர் அதிகாரிகள் பேசும் விஷயங்களில் இருந்து தகவல்களைப் பெற்று அதை ஆவணங்களாக சசிகாந்த் ஜா மாற்றியுள்ளதாகத் தெரிகிறது. ராணுவ ரகசியங்களை ஒருவர் வைத்திருப்பது அரசு ரகசியச் சட்டத்தின்படி குற்றமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x