Published : 07 Jan 2025 01:16 PM
Last Updated : 07 Jan 2025 01:16 PM
ஹைதராபாத்: புஷ்பா 2 திரைப்பட ப்ரீமியர் திரையிடலின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் சிறுவனை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இன்று மருத்துவமனையில் சந்தித்தார். முன்னதாக ஜனவரி 5-ம் தேதி சிறுவனை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பரின் தொடக்கத்தில் வெளியான புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தின் ப்ரீமியம் திரையிடலின் போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தார், அவரது மகன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுதொடர்பான வழக்கில் அல்லு அர்ஜுன் 11 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன் சிறுவனைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தபோது, தெலங்கானா மாநில பிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (எஃப்டிசி) தலைவர் தில் ராஜு உடன் இருந்தார். நடிகரின் வருகை காரணமாக மருத்துவமனையில் பலத்த பாதுக்காப்பு ஏற்படு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே ராம்கோபால்பேட்டை காவல்நிலைய மூத்த காவல் அதிகாரி, நடிகர் அல்லு அர்ஜுன் மருத்துவமனைக்கு செல்வது குறித்து நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும் மருத்துவமனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொது ஒழுங்கை பராமரிக்கும் வகையில் நடிகரின் வருகையை ரகசியமாக வைத்திருக்கவும் அறிவுறுத்தியிருந்தார். காவல்துறையும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, புஷ்பா 2 திரையிடலின் போது கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுவனுக்குகாக மிகவும் வருந்துவதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும், அவரையும், அவரது குடும்பத்தினரையும் சந்திக்க ஆர்வமாக இருப்பதாகவும் அல்லு அர்ஜுன் தெரிவித்திருந்திருந்தது நினைவுகூரத்தக்கது.
டிசம்பர் மாதம் 4ம் தேதி வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் ப்ரீயமியர் திரையிடலின் போது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்குக்கு வந்த அல்லு அர்ஜுனைக் காண வந்த ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தார், அவரது மகன் காயமடைந்தார்.
இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் அல்லு அர்ஜுன், அவரது பாதுகாவலர்கள், திரையரங்க நிர்வாகத்தினர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் டிச.13ம் தேதி கைது செய்யப்பட்டார். என்றாலும், தெலங்கானா உயர் நீதிமன்றம் நடிகருக்கு டிச.14ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனிடையே விசாரணை நீதிமன்றம் ஜன.3ம் தேதி அல்லு அர்ஜுனுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT